மகளிர் குழுவிற்கு ஊட்டச்சத்து போட்டி
சிவகங்கை: கிராம ஊராட்சிகள்,ஊராட்சி ஒன்றியங்களில் மகளிர் குழுக்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார். ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் கிராமங்களில் வாழும் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணி பெண்கள், பாலுாட்டும்தாய்மார்கள் மற்றும் முதியோர் போதிய ஊட்டச்சத்து மற்றும் விழிப்புணர்வு இன்றி நோய்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக ரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களை மேம்படுத்தும் நோக்கில் உணவு, ஊட்டச்சத்து, உடல்நலம், தன்சுத்தம்மற்றும் சுகாதாரம் பேணுதல் திட்டத்தின் மூலம் ரத்த சோகை இல்லாத கிராமம் குறித்த சிறப்பு பிரசாரம் நடைபெற்று வருகிறது. சிறுதானியங்கள், பாரம்பரிய உணவு திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார அளவில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள், 445 கிராம ஊராட்சிகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. ஊராட்சி அளவிலான போட்டிகள் செப்., 9 முதல் 12 வரை கிராம ஊராட்சி சேவை மையங்களிலும், வட்டார அளவிலான போட்டிகள் செப்., 16 முதல் 20 வரை வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்திலும் நடைபெறும்.