| ADDED : ஏப் 12, 2024 04:43 AM
காரைக்குடி: தேர்தல் நடைபெறும் நிலையில், பிரதமர் மோடி பெயரை ஒருமுறை கூட உச்சரிக்க மறுப்பவர் முன்னாள் முதல்வர் பழனிசாமி என மா.கம்யூ., மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேசினார்.காரைக்குடியில் காங்., வேட்பாளர் கார்த்தியை ஆதரித்து மா.கம்யூ., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் பெரிய கருப்பன், மா.கம்யூ., மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் தென்னவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், மா.கம்யூ., மாநில பொதுச் செயலாளர் பேசியதாவது:பா.ஜ., 10 ஆண்டு கால ஆட்சி என்ன செய்தது. ஆனால் 3 ஆண்டுகளில் தி.மு.க., பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியுள்ளது. தமிழகத்தை பழிவாங்கும் நோக்கில் மோடி அரசு செயல்படுகிறது.மோடி அரசு விவசாய கடனையோ, கல்விக்கடனையோ தள்ளுபடி செய்ததில்லை. அந்நிய நாட்டிடம் ரூ.90 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர்.வெறும் வாக்குமூலத்தை வைத்தே டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளனர். ஆனால் வாக்குமூலம் கொடுத்தவரை விடுதலை செய்துவிட்டனர். பா.ஜ., வுக்கும் எங்களுக்கும் எந்த உறவு இல்லை என்று பழனிசாமி தெரிவிக்கிறார். ஆனால் கூட்டத்தில் 50 முறைக்கு மேல் ஸ்டாலின் பெயரை கூறும் பழனிசாமி ஒருமுறை கூட மோடி பெயரை தெரிவித்ததில்லை என்றார்.