| ADDED : மே 24, 2024 02:36 AM
சிவகங்கை; 2024- -25 ம் கல்வி ஆண்டில் பாரா மெடிக்கல் படிப்பில் சேர நேற்று முதல் இணையவழி மூலம் விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கம் அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளுக்கு இணையாக பாரா மெடிக்கல் எனப்படும் துணை மருத்துவ படிப்புகளுக்கும் வரவேற்பு உள்ளது. இதில், பி.பார்ம்., பி.எஸ்சி., பட்டப்படிப்புகளில், நர்சிங், பிசியோதெரபி, ரேடியாலஜி, ஸ்பீச் ஆடியோலஜி, லாங்குவேஜ் பெத்தாலஜி, ரேடியோ தெரபி, ஆக்குபேஷன் தெரபி உள்ளிட்ட, ஒன்பது விதமான பாடத்திட்டங்கள் உள்ளன. தமிழக அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள இடங்கள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை அங்கீகாரம் செய்யப்பட்ட சுயநிதி கல்லுாரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.படித்து முடித்ததும் உடனடியாக வேலை கிடைக்கும் என்பதால், பிளஸ் 2 முடித்த, அறிவியல் பிரிவு மாணவர்களின் முக்கிய தேர்வாக, இது உள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யவும் இது குறித்து அனைத்து விவரங்களை அறியவும்www.tnmedicalselection.netஎன்ற இணையவழியை பயன்படுத்தலாம். இணைய வழியில் ஜூன் 21 மாலை 5:00 வரை விண்ணப்பிக்கலாம்.