| ADDED : ஜூன் 01, 2024 04:32 AM
திருப்புத்துார்: திருப்புத்துாரிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் ஓய்வு பெறும் தலைமையாசிரியர்களுக்கு மாற்றாக ஆசிரியர்களை விரைவில் நியமிக்க பெற்றோர்கள் கோரியுள்ளனர்.திருப்புத்துார் கோட்டையிருப்பு அரசு உயர்நிலைப்பள்ளி, தி.புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, திருப்புத்துார் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் இந்தக் கல்வியாண்டில் ஓய்வு பெறுகின்றனர். தலைமையாசிரியர்கள் மட்டுமின்றி கூடுதலாக சில ஆசிரியர்கள் ஒய்வு பெறுகின்றனர். விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் ஆசிரியர்கள் கலந்தாய்வில் தான் தெரியவரும்.ஒரே நேரத்தில் ஆசிரியர்கள் பலரும் ஓய்வு பெறுவது குறித்து ஆசிரியர்கள் தரப்பில் கூறுகையில், பொதுவாக மாநில அளவில் ஆசிரியர் பற்றாக்குறை தற்போது 18 சதவீத அளவில் உள்ளது. அடுத்த 5,6 ஆண்டுகளில் மேலும்,அதிகமான ஆசிரியர்கள் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். இதனால் அப்போது ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாகி அரசு பள்ளிகளின் கல்வித்தரம் பாதிக்கப்படும். கல்வித்துறையினர் உடனடியாக காலி பணியிடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்க முன் வர வேண்டும்.' என்கின்றனர்.கல்வி ஆர்வலர்கள் கூறுகையில், அரசு பள்ளிகளுக்கான அனைத்து வகுப்பு ஆசிரியர்களும் நியமனம் என்பது கேள்விக்குறியாகி பல ஆண்டுகளாகி விட்டது. தற்போதே கல்வித்துறையினர் இதில் கவனம் செலுத்தி அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை படிப்படியாக நிரப்புவதில் நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.