கிராமங்களை புறக்கணிக்கும் தனியார் பஸ்: மக்கள் அவதி
எஸ்.புதுார்: எஸ்.புதுாரில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் உள்ள கிராமங்களை தனியார் பேருந்து புறக்கணிப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர். திருச்சியில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு எஸ்.புதுார் வழியாக தனியார் பேருந்து இயக்கப்படுகிறது. காலை, மாலை இரு வேளையும் இயக்கப்படும் இப்பேருந்து வரும் வழியில் எஸ்.புதுாரில் இருந்து கட்டுக்குடிப்பட்டி வந்து திரும்பி செல்லும் வகையில் வழித்தட அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.கடந்த ஒரு மாதமாக இப்பேருந்து கட்டுக்குடிபட்டிக்கு வராமல் நேர்வழியிலேயே சென்று விடுகிறது. இதனால் அப்பேருந்தை நம்பியுள்ள பொதுமக்கள், மாணவர்கள் அவதிப்படுகின்றனர், எனவே அனுமதி வாங்கிய வழித்தடத்தின்படி கட்டுக்குடிபட்டி கிராமத்தை புறக்கணிக்காமல் பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.பொன்னமராவதியில் இருந்து சிங்கம்புணரிக்கு மேலவண்ணாரிருப்பு வழியாக இயக்கப்படும் டவுன் பஸ் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே புறப்பட்டு சென்று விடுகிறது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் பஸ்சை தவறவிட்டு, டூவீலர்களில் லிப்ட் கேட்டு வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே டவுன் பஸ்சை உரிய நேரத்தில் முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.