உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் மயானத்தில் குப்பை கொட்ட எதிர்ப்பு

சிவகங்கையில் மயானத்தில் குப்பை கொட்ட எதிர்ப்பு

சிவகங்கை : சிவகங்கை நகராட்சி 2வது வார்டான கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பொது மயான பகுதியில் குப்பை கொட்ட வந்த நகராட்சி வாகனத்தை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகளில் தினமும் 13 டன் குப்பை சேகரமாகிறது. இந்த குப்பைகளை சுந்தரநடப்பு பகுதியில் 13.5 ஏக்கரில்உள்ள நகராட்சிக்குச் சொந்தமான கிடங்கில் கொட்டி வந்தனர். சுகாதாரக்கேடு ஏற்படுவதாகக் கூறி சுந்தரநடப்பு, துவங்கால், மணக்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் குப்பைக் கிடங்கை அகற்ற வலியுறுத்தினர். சட்ட உதவி மையமும் அங்கு குப்பை கொட்ட தடை விதித்தது. இதனால்நகராட்சி நிர்வாகம் அங்கு குப்பை கொட்டுவதை நிறுத்தியது. பின்னர் பயோ மைனிங் முறையில் குப்பை பிரிக்கப்பட்டு அகற்றப்பட்டது.குப்பை கொட்ட இடம் இல்லாத நகராட்சி நிர்வாகம் மானாமதுரை ரோட்டில் உள்ள தெற்கு மயானம், காளவாசல், மருதுபாண்டியர் நகர் உள்ளிட்ட இடங்களில் குப்பையைக் கொட்டி வைத்து நுண் உரம் தயாரித்து வருகிறது. இந்த பகுதியிலும் குப்பைகளை கொட்ட அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.கடந்த ஆண்டு நகராட்சி தலைவர் துரை ஆனந்த் தலைமையில் கவுன்சிலர்கள் குப்பை கிடங்குக்கு 6 ஏக்கர் அரசு புறம் போக்கு நிலம் ஒதுக்க வேண்டுமென கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இது வரை மாவட்ட நிர்வாகம் சிவகங்கை நகராட்சிக்கு குப்பை கொட்ட இடம் ஒதுக்காத நிலையில், குப்பையை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பின்புறம், சிவகங்கையில் உள்ள நீர் நிலைகள், ரோட்டோரங்களில் கொட்டுகிறது. சிவகங்கை நகரில் அனைத்து வார்டுகளிலும் ரோட்டோரத்தில் குப்பை தேங்கி கிடக்கிறது. இந்நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மயான பகுதியில் குப்பையை கொட்ட நகராட்சி வாகனம்சென்றது. அப்பகுதி மக்கள் நகராட்சி வாகனத்தைச் சிறைபிடித்துபோராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி சார்பில் இனிமேல் இங்கு குப்பை கொட்டமாட்டோம் என்று கூறியதன் பேரில் பொதுமக்கள் வாகனத்தை விடுவித்தனர்.2வது வார்டு தெய்வேந்திரன் கூறுகையில், எங்கள் பகுதியில் உள்ள மயானத்தில் நகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. மக்கள் இந்த பகுதியில் வசிக்க முடியவில்லை. நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை. எனவே குப்பை கொட்ட வந்த நகராட்சி வண்டியை சிறை பிடித்து இங்கு குப்பை கொட்டகூடாது என்று திருப்பி அனுப்பினோம். மாவட்ட நிர்வாகம் இதில் தக்க நடவடிக்கை எடுத்து நகராட்சியில் ஏற்படும் குப்பை பிரச்னை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சிவகங்கையில் குப்பை கொட்டுவதற்கு இடம் இல்லை. கலெக்டரிடம் அரசு புறம்போக்கு இடம் கேட்டுஉள்ளோம். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தான் இந்த பிரச்னைக்கு தீர்வுகாணமுடியும். மாவட்ட நிர்வாகம் இடம் கொடுத்தால் இந்த பிரச்னை முடிந்துவிடும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை