உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பா.ஜ., நிர்வாகி கொலையில் சிக்கியவர் மீது துப்பாக்கி சூடு

பா.ஜ., நிர்வாகி கொலையில் சிக்கியவர் மீது துப்பாக்கி சூடு

சிவகங்கை : சிவகங்கை, வேலாங்குளத்தை சேர்ந்த பா.ஜ., கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலர் செல்வகுமார், 52, கடந்த 2ம் தேதி இரவு வெட்டிக் கொல்லப்பட்டார். தனிப்படை போலீசார் விசாரித்து, மேலப்பிடாவூர் மருதுபாண்டி, 20, சாத்தரசன்கோட்டை அருண்குமார், 20, வைரம்பட்டி வசந்தகுமார், 25, புதுப்பட்டி சதீஷ், 21, எம்.ஜி.ஆர்., காலனி விஷால், 20, ஆகியோரை கைது செய்தனர்.கடந்த 2019ல் மேலப்பிடாவூர் புவனேஸ்வரன் கொலை செய்யப்பட்டார். பழிக்குப்பழியாக இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது. கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை, புதுப்பட்டியில் பதுக்கி வைத்திருப்பதாக வசந்தகுமார் கூறியுள்ளார். நேற்று மாலை, 6:30 மணிக்கு புதுப்பட்டி கிராமத்திற்கு அவரை, போலீசார் அழைத்துச் சென்றனர்.கோவில் அருகே மறைத்து வைத்திருந்த வாளை எடுத்த வசந்தகுமார், அருகில் நின்ற தாலுகா எஸ்.ஐ., பிரதாப்பை தாக்கி தப்ப முயன்றார். இதில், எஸ்.ஐ.,க்கு இடது கையில் வெட்டு விழுந்தது. வசந்தகுமாரை இன்ஸ்பெக்டர் மணிகண்டன், துப்பாக்கியால் காலில் சுட்டு, பிடித்தார்.இருவரும் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வசந்தகுமார், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ