| ADDED : மே 26, 2024 04:09 AM
சிவகங்கை: இணைய வழியில் உணவு வினியோகம் உள்ளிட்ட சேவை பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஜூன் 14 வரை தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார். அவர் கூறியதாவது:தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் மூலம் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் உணவு வினியோகம், மின் வர்த்தக நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் மளிகை உள்ளிட்ட அனைத்து வகை வணிக பொருட்களின் வினியோக ஊழியர்கள், இணைய செயலி வழியாக வழங்கப்படும் வாடகை வாகன சேவைகள் மற்றும் இதர சேவைகள் இப்போது இணைய வழி Gig முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. சிவகங்கை மாவட்டம், முழுவதும் இணைய வழியில் உணவு வினியோகம் உள்ளிட்ட சேவை பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா Gig தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கான சிறப்பு முகாம் தற்போது முதல் ஜூன் 14ம் தேதி வரை தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. முகாமிற்கு வரும் உறுப்பினர்கள் தங்களின் அசல் ஆவணங்களான குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி புத்தகம், ஓட்டுநர் உரிமம், மற்றும் புகைப்படம் ஆகியவைகளுடன் பதிவு செய்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறலாம் என்றார்.