டாக்டரிடம் பணம் பறித்த வழக்கு கருப்பு ஆடுகளால் போலீசார் திணறல்
சிவகங்கை : காரைக்குடியில் தனியார் டாக்டர் ஒருவரை மிரட்டிய வழக்கில் குற்றவாளிகளுக்கு போலீசார் சிலரே உடந்தையாக இருப்பதால் தனிப்படை போலீசார் திணறி வருகின்றனர்.காரைக்குடி தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவரை தவறான முறையில் வீடியோ எடுத்து பணம் கேட்டு ஒரு கும்பல் மிரட்டியுள்ளது. அந்த டாக்டர் காரைக்குடி டி.எஸ்.பி.,பிரகாஷிடம் புகார் அளித்தார்.காரைக்குடி போலீசார் ரகசியமாக விசாரிக்க தொடங்கினர்.குற்றவாளிகளை பிடிக்க சிவகங்கை நகர் எஸ்.ஐ., ஹரிகிருஷ்ணன் தலைமையில் எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் தனிப்படை அமைத்தார். தனிப்படையினர் குற்றவாளிகளை தேடி சென்றால் தனிப்படை செல்லும் முன் குற்றவாளிகளுக்கு தகவல் கிடைத்து தப்பித்து விடுகின்றனர்.கடந்த சில நாட்களாக தனிப்படையினரும் மாவட்டம் விட்டு மாவட்டம் குற்றவாளிகளை தேடிவருகின்றனர் ஆனால் போலீஸ் துறையில் உள்ள கருப்பு ஆடுகளால் அவர்களை பிடிக்க முடியாமல் தனிப்படை போலீசார் திணறி வருகின்றனர். அந்த கும்பலை பிடித்தால் காரைக்குடியில் பல புள்ளிகள் விஷயங்கள் வெளியே வரும் என்பதால் போலீசார் சிலரே அந்த கும்பலை தப்பிக்க வைக்கின்றனர்.