| ADDED : மே 10, 2024 04:58 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் மதிய வேளையில் நடுரோட்டில் அரசு பஸ் பழுதாகி நின்றதால் பயணிகள் தவிப்பிற்குள்ளாகினர்.மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி வழியாக மானாமதுரை, பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.கடந்த சில மாதங்களுக்கு முன் கிளை பணிமனைகளுக்கு மஞ்சள் நிற புதிய பஸ் வழங்கப்பட்டது. பல பஸ்களில் தானியங்கி கதவுகளில் உள்ள ரப்பர் இணைப்பு சேதமடைந்து விட்டன. தானியங்கி கதவுகளும் சரிவர திறப்பதில்லை. நேற்று காலை 10:15 மணிக்கு மானாமதுரையில் இருந்து மதுரை சென்ற புதிய மஞ்சள் நிற பஸ்சின் டயர் திருப்புவனம் வரும் போது பஞ்சரானது. டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டு பயணிகளை அடுத்தடுத்து வந்த பஸ்களில் ஏற்றி அனுப்பி வைத்தார். திருப்புவனம் நகருக்குள் பஸ்கள் பெரும்பாலும் வருவது இல்லை என்பதால் பயணிகள் நீண்ட நேரம் வெயிலில் காத்து கிடந்தனர்.பயணிகள் கூறுகையில்: புதிய பஸ்சில் ஸ்டெப்னி டயர், ஜாக்கி, லீவர் உள்ளிட்டவை இல்லாததால் டிரைவர் அனைவரையும் இறக்கி விட்டு விட்டார். திருப்புவனம் பணிமனையில் டயர் மாற்றிவிட்டு வருவதாக சென்று விட்டார். பொதுவாக புதிய வாகனங்களுக்கும் அனைத்து உபகரணங்களும் வழங்கப்படும், 50 லட்ச ரூபாய் பஸ்சில் எதுவும் இல்லாதது வேதனையை ஏற்படுத்தியுள்ளது, என்றனர்.போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறுகையில் :புது பஸ்களில் உள்ள ஸ்டெப்னி டயர்களை கழற்றி வேறு பஸ்களில் பயன்படுத்துவதால் டயர் சேதமடையும் போது பணி மனைக்கு கொண்டு சென்று தான் டயர் மாற்ற முடியும், அதிகாரிகள் உதிரிபாகங்கள் எதுவும் வாங்குவதில்லை. இருப்பதை வைத்து சமாளிக்க வலியுறுத்துவதால் பயணிகளிடம் நாங்கள் தான் தவிக்கிறோம், என்றனர்.