| ADDED : மே 15, 2024 06:31 AM
கீழடி : கீழடி அருங்காட்சியகத்தில் புதிய பொருட்களை காட்சிப்படுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.கீழடியில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு கண்டறியப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆறு கட்டட தொகுதிகளில் 13 ஆயிரத்து 814 பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.தமிழக தொல்லியல் துறை சார்பில் எட்டு மற்றும் ஒன்பதாம் கட்ட அகழாய்வில் நீள் வடிவ தாயக்கட்டை, இரும்பு கத்தி, ஸ்படிக எடைகல், பாம்பு வடிவ சுடுமண் பொம்மை உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டறியப்பட்டன.ஆனால் அருங்காட்சியகம் திறக்கப்பட்ட போது வைக்கப்பட்ட பொருட்களே இன்று வரை உள்ளன. புதிய பொருட்கள் எதுவும் காட்சிப்படுத்தப்படவில்லை.ஆறு கட்டட தொகுதிகளிலும் போதிய இடவசதி உள்ளன. புதிய பொருட்களையும் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாபயணிகள் வலியுறுத்தியுள்ளனர். தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில் : புதிய பொருட்கள் காட்சிப்படுத்துவது குறித்து அரசு தான் முடிவு எடுக்க வேண்டும், தமிழக தொல்லியல் துறை சார்பில் இதுவரை 20 ஆயிரம் பொருட்களுக்கு மேல் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் 15 சதவிகித பொருட்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அரசு அனுமதி அளித்தால் தான் கூடுதல் பொருட்கள் காட்சிப்படுத்த முடியும், என்றனர்.