| ADDED : ஏப் 06, 2024 05:20 AM
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்த பல்வேறு பழைய அடையாள அட்டை, ஆவணங்கள் குப்பையில் வீசப்பட்டுள்ளது.இங்குள்ள சிறுவர் பூங்கா அருகே உள்ள கட்டடத்தில் பழைய வட சிங்கம்புணரி வி.ஏ.ஓ., அலுவலகம் செயல்பட்டது. கட்டடம் பழுதால் 2ஆண்டுகளாக தாலுகா அலுவலக வளாகத்தில் அலுவலகம் செயல்படுகிறது. இந்நிலையில் பழைய கட்டடம் அருகே உள்ள குப்பையில் மக்களின் அடையாள அட்டைளை யாரோ வீசியுள்ளனர். இது குறித்து போலீசாருக்கும், வருவாய்த் துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.அவர்கள் வந்து பார்த்தபோது கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய பழைய வாக்காளர் அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு , உழவர் பாதுகாப்பு திட்டம், அமைப்புசாரா தொழிலாளர் நலத்திட்ட அடையாள அட்டைகள், ஜாதிச் சான்றிதழ் என பல்வேறுஆவணங்கள் கிடந்தன. அவற்றை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பழைய கட்டடத்தில் மூடையில் இருந்த பழைய அட்டைகள், ஆவணங்களை யாரோ கதவை உடைத்து வேண்டுமென்றே குப்பையில் வீசியுள்ளதாகவும், அவற்றால் தற்போது மக்களுக்கு பயன் ஏதும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.