| ADDED : ஏப் 18, 2024 06:31 AM
சிவகங்கை: காரைக்குடி அழகப்பா அரசு இன்ஜி., கல்லுாரி ஓட்டு எண்ணும் மையத்திற்கு உரிய மின்வசதி குறித்த ஏற்பாடுகளை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் குருசாமி பார்வையிட்டார்.சிவகங்கை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை (தனி), திருப்புத்துார், ஆலங்குடி, திருமயம் ஆகிய 6 சட்டசபை தொகுதியில் உள்ள 1,873 ஓட்டுச்சாவடிகளில் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஓட்டுப்பதிவன்று பயன்படுத்தப்படும் 3,746 ஓட்டுப்பதிவு இயந்திரம், தலா 1,873 கட்டுப்பாடு, ஓட்டு உறுதி தன்மை இயந்திரங்கள் காரைக்குடி அழகப்பா அரசு இன்ஜி., கல்லுாரி, பாலிடெக்னிக்கில் அமைத்துள்ள ஓட்டு எண்ணும் மைய தனி அறையில் வைக்கப்பட உள்ளன. ஜூன் 4 ம் தேதி ஓட்டு எண்ணும் பணி நடக்கிறது.ஓட்டு எண்ணும் மையங்களில் 'சிசிடிவி' கேமராக்கள், போலீஸ் மூலம் பிரேம் டிடெக்டர் கருவிகள், கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. இவற்றிற்கு தடையின்றி மின்சாரம் வழங்கும் பொருட்டு, நடைபெறும் பணிகளை சிவகங்கை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் குருசாமி பார்வையிட்டார். காரைக்குடி செயற்பொறியாளர் லதாதேவி, உதவி கோட்ட பொறியாளர்கள் புவனேஸ்வரி, முத்துராமன், உதவி பொறியாளர் அப்துல் சலாம் ஆய்வு செய்தனர். ஜூன் 4 வரை தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு, தனியாக 'டிரான்ஸ்பார்மரில்' இருந்து மின்சப்ளை வழங்குவது குறித்து ஆலோசனை செய்தனர்.