பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வி.ஏ.ஓ.,விற்கு சிறை * வி.ஏ.ஓ.,விற்கு 3 ஆண்டு சிறை
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே காரையூரில் பட்டா மாறுதலுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் வி.ஏ.ஓ.,விற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10,000 அபராதம் விதித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.காரையூரைச் சேர்ந்தவர் பாக்கியம். இவர் சாவித்ரி என்பவரிடம் 3 சென்ட் நிலம் வாங்கினார். இந்த நிலத்தை தன் பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய பாக்கியம் 2013 நவ.,ல் வி.ஏ.ஓ., ராஜாவிடம் 50, விண்ணப்பித்தார். அவர் பட்டா மாறுதல் செய்ய ரூ.5000 தருமாறு கேட்டார். இதுகுறித்து பாக்கியம் சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.போலீசார் ஆலோசனையின்படி லஞ்சப்பணத்தை பாக்கியம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் வி.ஏ.ஓ., ராஜாவை கைது செய்தனர். இவ்வழக்கு சிவகங்கை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி செந்தில்முரளி, வி.ஏ.ஓ., ராஜாவிற்கு ஊழல் தடுப்பு சட்டப்படி 3 ஆண்டுகள், லஞ்சம் பெற்றதற்காக 3 ஆண்டுகள் என 6 ஆண்டுகளும், தலா ரூ.5000 வீதம் இரு பிரிவுக்கு ரூ.10,000 அபராதமும் விதித்தார். சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை விதிக்கப்படும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.