| ADDED : ஜூலை 23, 2024 05:17 AM
திருப்புவனம்: திருப்புவனத்தை சுற்றியுள்ள மாவட்ட எல்கையில் புறக்காவல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.சிவகங்கை மாவட்ட எல்லையில் திருப்புவனம் நகரம் அமைந்துள்ளது. மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட எல்கையை ஒட்டி திருப்புவனம் நகரம் அமைந்துள்ள நிலையில் மாவட்ட எல்கையில் போதிய பாதுகாப்பு இல்லை. பொட்டப்பாளையம் புறக்காவல் நிலையம் தவிர மற்ற பகுதிகளில் புறக்காவல் நிலையமோ சோதனை சாவடிகளோ இல்லை. இதனால் தேனி, கேரளா பகுதிகளில் இருந்து கிராமப்புறங்கள் வழியாக கஞ்சா கடத்தல் சாதாரணமாக நடக்கிறது. எல்லையோர கிராமங்களில் சேவல் சண்டையும் பிரதானமாக நடக்கிறது. கீழவெள்ளுரில் இரு ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட போது தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்த இடம் எப்படி தெரியும் என போலீசார் கேட்டதற்கு சேவல் சண்டைக்காக இப்பகுதிக்கு அடிக்கடி வருவோம் என தெரிவித்துள்ளனர். இதுபோன்று எல்லையோர கிராமங்களில் சட்டவிரோத நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க போலீஸ் சோதனை சாவடிகள் இல்லாததே முக்கிய காரணம். பழையனூர் அருகே கிடாக்குழி, மேலராங்கியன், தஞ்சாக்கூர் கிராமங்களை ஒட்டி விருதுநகர் மாவட்டம் துவங்குகிறது. திருமணப்பதி, பூவந்தி, கிளாதரி உள்ளிட்ட இடங்களில் இருந்து மதுரை மாவட்ட எல்லைகள் தொடங்குகின்றன. இந்த இடங்களில் புறக்காவல் நிலையங்களோ, சோதனைச்சாவடிகளோ இல்லை. ஆனால் விருதுநகர் மாவட்ட போலீசார் நரிக்குடி ரோட்டில் கருவக்குடி, எஸ். நாங்கூரில் சோதனை சாவடி அமைத்து 24 மணிநேரமும் கண்காணிக்கின்றனர். மாவட்ட எல்கையில் சோதனைச்சாவடி இல்லாததால் வழிப்பறி சம்பவங்கள் எளிதில் நடக்கின்றன. இதை தவிர்க்க மாவட்ட எல்ககைளில் புறக்காவல் நிலையம் அல்லது சோதனைச்சாவடி அமைக்க வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்துகின்றனர்.