உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு வாகன பணிமனைகளில் 1,396 காலிபணியிடம்   * மே 22 ல் போராட்டம் நடத்த முடிவு  

அரசு வாகன பணிமனைகளில் 1,396 காலிபணியிடம்   * மே 22 ல் போராட்டம் நடத்த முடிவு  

சிவகங்கை:தமிழகத்தில் 38 ஆயிரம் அரசு வாகனங்களை பராமரிக்க 392 பேர் மட்டுமே இருப்பதாகவும், காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி போராட்டம் நடத்த, தமிழ்நாடு அரசு மோட்டார் வாகன பராமரிப்பு நிறுவன தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் அரசு அலுவலகங்களுக்கென 38 ஆயிரம் வாகனங்கள் ஓடுகின்றன. இவற்றை பராமரிக்க 20 அரசு பணிமனைகள் செயல்படுகின்றன. அரசு பணிமனை துறையின் கீழ் இயக்குனர், பிட்டர், மெக்கானிக், எலக்ட்ரீஷியன் முதல் துாய்மை பணியாளர் வரை 1791 பேர் பணிபுரிய வேண்டும். இதில் நிர்வாக பிரிவில் 1297 பேர் பணிபுரிய வேண்டிய இடத்தில் 392 பேரும், 494 பேர் இருக்க வேண்டிய தொழில்நுட்ப பிரிவில் 3 பேரும் மட்டுமே உள்ளனர். 1396 பணியிடங்கள் காலியாக உள்ளன. முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனம், அனைத்து அரசு செயலர்கள், போலீஸ் அதிகாரிகள், மாவட்ட அளவில் கலெக்டர், எஸ்.பி.,க்கள், துறை ரீதியான மாவட்ட அதிகாரிகளின் அரசு வாகனங்கள் அனைத்தும் இங்கு தான் பழுது நீக்கப்படுகிறது. ஆனால் ஊழியர் பற்றாக்குறையால் இங்கு முடிவதில்லை. தனியாரிடம் பழுது நீக்கி அதிகாரிகள் பில் பெறுகின்றனர்.தமிழ்நாடு அரசு மோட்டார் வண்டிகள் பராமரிப்பு நிறுவன தொழிலாளர் சங்க மாநில தலைவர் எம்.வெங்கடேசன் கூறியதாவது: 2023- -2024 ம் ஆண்டில் மட்டும் பழுது நீக்க தனியாருக்கு ரூ.9 கோடி வரை அரசு வழங்கியுள்ளது. இந்த நிதியை வைத்து 350 முதல் 400 பேரை நியமித்துவிடலாம். ஆனால் வேண்டுமென்றே காலி பணியிடங்களை நிரப்பவில்லை. இந்நிலையில் மே 8 ம் தேதி வெளியிட்ட அரசாணையில் 171 பணியிடங்களை 'அவுட்சோர்சிங்' முறையில் மாதம் ரூ.34 ஆயிரம் சம்பளத்தில் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்துக்கிடக்கும் ஐ.டி.ஐ., முடித்தவர்களை பணிக்கு எடுத்தால், ரூ.22 ஆயிரம் கொடுத்தால் போதும். இதை கண்டித்து மே 22 ல் சென்னை வேளச்சேரியில் இயக்குனர் அலுவலகம் முன் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி