மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டில் கண்டக்டரை ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய 3 பேர்
மானாமதுரை:சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டில் தனியார் பஸ் கண்டக்டர் தவச் செல்வத்தை 23, மூன்று பேர் ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்றனர். இதை கண்டு அதிர்ச்சியுற்ற பயணிகள் அலறி அடித்து சிதறி ஓடினர். மானாமதுரை அருகே சிறுகுடியைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் தவச்செல்வம் 23. இவர் மதுரை - இளையான்குடி இடையே இயங்கும் தனியார் பஸ்சில் கண் டக்டராக வேலை செய்கிறார். நேற்று மதியம் 2:00 மணிக்கு வேலை முடிந்து இவர் மானாமதுரையில் பஸ்சிலிருந்து இறங்கி பஸ் ஸ்டாண்டில் தங்கியிருந்தார். நேற்றிரவு 7:15 மணிக்கு அடையாளம் தெரியாத 3 பேர் தவச்செல்வத்தை பஸ் ஸ்டாண்டுக்குள் வைத்து ஓட, ஓட விரட்டி அரிவாள் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். போலீசார் அவரை வெட்டிய மூவரை தேடி வருகின்றனர். நேற்றிரவு பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்த நேரத்தில் எந்த அச்சமும் இன்றி கண்டக்டரை 3 பேர் வெட்டியதை கண்டு அதிர்ச்சியுற்றவர்கள் 4 பக்கமும் சிதறி ஓடினர். பஸ் ஸ்டாண்டில் சில மாதங்களாக போலீசார் ரோந்து செல்லாத காரணத்தால் சிலர் மது குடித்து விட்டு பயணிகளிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். பஸ் ஸ்டாண்டிற்குள் சர்வ சாதாரணமாக பயணிகள் வந்து செல்லும் இடங்களிலும் பெண்கள் கூட சிலர் மது குடித்து விட்டு இரவு சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து பயணிகள் கூறியதாவது: பஸ் ஸ்டாண்டிற்குள் மது அருந்துவது குறித்து போலீசாரிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை நடவடிக்கையும் இல்லை. நேற்று பயணிகள் கூட்டம் அதிகம் இருந்த நிலையிலும் எவ்வித பயமுமின்றி 3 பேர் கண்டக்டர் ஒருவரை ஓட, ஓட விரட்டி வெட்டினர். அவுட்போஸ்ட் அமைத்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றனர்.