முளைப்பாரி ஊர்வலத்தில் கல்வீச்சு போலீசார் உட்பட 5 பேர் காயம்
மானாமதுரை : மானாமதுரை அருகே எஸ்.காரைக்குடி கிராமத்தில் நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலத்தில் கல்வீசி தாக்கியதில் ஒரு போலீசார் உட்பட 5 பேர் காயமடைந்தனர். அக்கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எஸ்.காரைக்குடி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். முளைப்பாரி விழாவின் போது ஒரு பிரிவினரை முளைப்பாரி துாக்க அனுமதிக்காததால் பிரச்னை ஏற்பட்டது. சிவகங்கை கோட்டாட்சியர் மற்றும் மானாமதுரை தாசில்தார் அலுவலகங்களில் நடந்த சமாதான பேச்சு வார்த்தை யில் ஒரு பிரிவினர் தனியாக முளைக்கொட்டு திண்ணை கட்டி முளைப்பாரி விழா கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் ஒரு பிரிவினர் முளைப்பாரி விழாவிற்காக புதிதாக முளைக்கொட்டு திண்ணை கட்டி கண்மாயில் பூ கரகம் வளர்த்து நேற்றுமாலை 4:00 மணிக்கு முளைப் பாரிகளை தூக்கிக் கொண்டு வந்த போது ஒரு பிரிவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்கு வாதம் ஏற்பட்டது. தொடர்ந்து நடந்த பிரச்னையில் கல்வீசி தாக்கியதில் ஒரு போலீசார் உட்பட 5பேர் காயம் அடைந்தனர். கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா, தாசில்தார் கிருஷ்ணகுமார், டி.எஸ்.பி., அமல அட்மின் மற்றும் போலீசார் இரு பிரிவினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி முளைப்பாரி ஊர்வலத்தை நடத்தினர். கிராமத்தில் மேலும் பிரச்னை ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.