நகைக்கடன் தள்ளுபடி தொகைரூ.606 கோடி அரசு விடுவிப்பு
சிவகங்கை:தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் அடமானம் வைத்த நகைகளுக்கான தள்ளுபடி தொகை ரூ.606 கோடியை மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு விடுவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள 4500 க்கும் மேற்பட்ட தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகள், பொதுமக்கள் நகை அடமானத்தின் பேரில் கடன் பெற்றிருந்தனர். அவர்களது கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.அனைத்து தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் நகை அடமானம் வைத்தவர்களின் பட்டியலை தயாரித்து, அதில், 5 பவுன் (40 கிராம்) நகைக்கு குறைவாக அடமானம் வைத்தவர்களின் நகை கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி அனைத்து தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் அடமானமாக வைத்தவர்களின் 5 பவுன் நகைக்கு கீழ் உள்ள கடன் தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டது.2ம் கட்டமாக தள்ளுபடி தொகை ரூ.606 கோடியே 78 லட்சத்தை அந்தந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு விடுவித்துள்ளது. இதன் மூலம் மத்திய கூட்டுறவு வங்கிகள், அந்தந்த தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு தள்ளுபடி தொகையை ஒதுக்கீடு செய்யும். இதனால் நலிவடைந்துள்ள தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் புத்துயிர் பெறும் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.