ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது: 840 கிலோ பறிமுதல்
சிவகங்கை: சிவகங்கையில் வாகன சோதனையில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ஒரு சிறுவர் உட்பட இருவரை கைது செய்த போலீசார் 840 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.சிவகங்கை மதுரை ரோட்டில் குடிமை பொருள் குற்றப்புலனாய்வு துறை எஸ்.ஐ., திபாகர் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். முத்துப்பட்டி அருகே வந்த மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். வாகனத்தில் 21 பிளாஸ்டிக் பைகளில் 40 கிலோ வீதம் மொத்தம் 840 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை போலீசார் உறுதி செய்தனர். வாகனத்தை ஓட்டி வந்த 16 வயது சிறுவனையும், திருப்பூரை சேர்ந்த அய்யங்காளை மகன் சஞ்சய்குமாரை 19 கைது செய்து விசாரித்தனர். சிறுவனின் சொந்த கிராமமான வெள்ளிக்குறிச்சியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ரேஷன் அரிசியை சேகரித்து மதுரை வரிச்சூரில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றதாக கூறினர்.