மானாமதுரை-இளையான்குடி தாயமங்கலம் வழி கூடுதல் பஸ்
மானாமதுரை; மானாமதுரையில் இருந்து தாயமங்கலம் வழியாக இளையான்குடிக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிலிருந்து இளையான்குடி, பரமக்குடி, தாயமங்கலம், நரிக்குடி, சிவகங்கை, மல்லல், காளையார் கோவில், திருப்பாச்சேத்தி, திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அரசு டவுன் பஸ்கள் சென்று வருகின்றன.மானாமதுரையில் இருந்து இளையான்குடிக்கு தெ.புதுக்கோட்டை, மேல நெட்டூர் வழியாக ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அரசு டவுன் பஸ்கள் சென்று வருகின்றன. ஆனால் மானாமதுரையில் இருந்து தாயமங்கலம் வழியாக இளையான்குடிக்கு 4 மணி நேரத்திற்கு ஒரு முறை மட்டுமே அரசு பஸ் சென்று வருவதால் அப்பகுதி கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலுக்கு பல்வேறு ஊர்களில் இருந்தும் தினந்தோறும் பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் போதிய பஸ் வசதி இல்லாததால் கூடுதல் கட்டணம் கொடுத்து பிற வாகனங்களில் செல்ல வேண்டியுள்ளது. போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் மானாமதுரையில் இருந்து தாயமங்கலம் வழியாக கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.