உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரிக்கு பாதுகாப்பு பணிக்கு கூடுதல் போலீஸ்

சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரிக்கு பாதுகாப்பு பணிக்கு கூடுதல் போலீஸ்

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரியில் இரவு நேர கண்காணிப்பிற்கு கூடுதல் போலீசார் பணியமர்த்த மருத்துவமனை நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவிற்கு தினசரி 1000க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக 800 பேர் உள்ளனர். அவசரகால தீவிர சிகிச்சை பிரிவு 24 மணிநேரமும் செல்படுகிறது. இந்த மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட டாக்டர்கள், 300க்கும் மேற்பட்ட செவிலியர்கள், 500 மருத்துவ மாணவர்கள், 300க்கும் மேற்பட்ட பல்நோக்கு பணியாளர்கள் பணி புரிகின்றனர். மாவட்டத்தின் பிற பகுதியில் இருந்தும் அருகில் உள்ள ராமாநாதபுரம் மாவட்டம் தொண்டி, திருவாடானை, பார்த்திபனுார் உள்ளிட்ட பகுதியில் இருந்தும் மக்கள் சிவகங்கை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர்.இந்த மருத்துவமனையில் விபத்து உள்ளிட்ட மற்ற முதல் தகவல்களை பெற, பாதுகாப்பு பணிக்கு மொத்தம் 4 போலீசார் உள்ளனர். இரவில் 2 பேரும் பகலில் 2 பேரும் பணிபுரிகின்றனர். இவர்களால் முழுமையாக மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட முடியவில்லை. மருத்துவக் கல்லுாரி நிர்வாகத்தினர் கூறுகையில், பணியில் உள்ள இரண்டு போலீசார் முதல் தகவல் அறிக்கை பெறுவதற்கும் தீவிர சிகிச்சை பிரிவை கண்காணிக்கவும் சென்று விடுகின்றனர்.இரவு நேரங்களில் மருத்துவமனை முழுவதும் கண்காணிக்க சிரமம் உள்ளது. அதேபோல் பாதுகாப்பு பணியில் ஆண் போலீசார் மட்டுமே உள்ளனர். அதிக பெண்கள் பணிசெய்யும் மருத்துவக் கல்லுாரியில் பெண் போலீசார் உள்ளிட்ட கூடுதல் போலீசாரை பணியில் அமர்த்தி மருத்துவக்கல்லுாரியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ