உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் விவசாய பணி தொடக்கம் :உழவு கருவி தயாரிக்கும் தொழிலாளர்கள்

திருப்புவனத்தில் விவசாய பணி தொடக்கம் :உழவு கருவி தயாரிக்கும் தொழிலாளர்கள்

திருப்புவனம்: திருப்புவனத்தில் விவசாய பணி தொடங்கியதை அடுத்து உழவு கருவிகள் தயாரித்து விற்பனை செய்வதற்காக வடமாநில தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக வந்துள்ளனர். தென்மாவட்டங்களில் விவசாய கருவிகள் தயாரிப்பில் முன்னணியில் இருப்பது திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதி தான். இங்கு தயாராகும் அரிவாள், கத்தி, கடப்பாரை, மண்வெட்டி, கோடாரி போன்ற விவசாய கருவிகள் தமிழகம் முழுவதும் விற்பனையாகின்றன. கனரக வாகனங்களில் சேதமடைந்த இரும்பு பட்டைகளை மதுரை மார்க்கெட்டில் மொத்தமாக வாங்கி வந்து தேவைக்கு ஏற்ற அளவில் வெட்டி அரிவாள், கத்தி உள்ளிட்டவைகள் தயாரிக்கின்றனர். தற்போது திருப்புவனம் வட்டாரத்தில் நெல்சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளன. உழவு பணிகளுக்கு மண்வெட்டி, களை வெட்டி, அரிவாள் உள்ளிட்டவைகள் தேவை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி பட்டறைகளில் தயாரிக்கப்படும் தரமான உழவு கருவிகளின் விலை சற்று அதிகம், அரிவாள்கள் குறைந்தபட்சம் 500 ரூபாயில் இருந்து அதன் தரத்திற்கு ஏற்ப ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே போல மண்வெட்டி, களை வெட்டிகளின் விலையும் அதிகம், ஆனால் வடமாநில தொழிலாளர்கள் பலரும் குறைந்த விலையில் உழவு கருவிகள் விற்பனை செய்வதால் விவசாயிகள் பலரும் விரும்பி வாங்கி பயன்படுத்துகின்றனர். திருப்புவனம் பைபாஸ் ரோடு அருகே வடமாநில தொழிலாளர்கள் பத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர். கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். ரயில்வே பாதையை ஒட்டியுள்ள கருவேல மரங்களை வெட்டி விறகாக பயன்படுத்தி பட்டறையை உருவாக்கி உள்ளனர். ஆண், பெண் என அனைவருமே உழவு கருவிகள் தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். தயாரிக்கப்பட்ட உழவு கருவிகளை எடுத்து கொண்டு நடந்தே பல்வேறு இடங்களுக்கும் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை