| ADDED : மார் 22, 2024 04:49 AM
கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக எத்தனையோ பாரம்பரிய கட்டடங்கள் இருந்தாலும் அத்தனையிலும் முதன்மையாக இருப்பது செட்டிநாட்டு பங்காளாக்களே.நீண்ட அகலமான தெருக்கள், மழைநீர் செல்வதற்கு வடிகால், மழைநீரை சேமித்து வைக்க, குளங்கள், தெப்பங்கள், கண்மாய்கள் என நீர் மேலாண்மையில் சிறந்த விளங்கியதோடு நாகரீகத்தின் அடையாளமாகவும் இருந்தது.ஆனால், தற்போது வடிகால், குளங்கள், கண்மாய்கள் என அனைத்தும் அழிவின் விளிம்பில் சிக்கித் தவிப்பதோடு எதிர்கால சந்ததிகள் வெள்ளத்தில் சிக்கும் அபாயமும் நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.காரைக்குடியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கால்வாய் உட்பட 10 க்கும் மேற்பட்ட வரத்து கால்வாய்கள் உள்ளன. காரைக்குடி வாட்டர் டேங்க், செக்காலை, ஐந்து விளக்கு உட்பட பல்வேறு பகுதிகளிலும் வரத்துக் கால்வாய்கள் உள்ளன. நகரில் பெய்யும் மழைநீரானது வரத்து கால்வாய் மூலம் அதலைக் கண்மாய் மற்றும் காரைக்குடி கண்மாயை சென்றடையும். ஆனால் தற்போது கால்வாய்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் சிக்கி அழிந்து வருவதாலும், முறையாக துார்வாரப்படாததாலும் சாக்கடை கலந்து சாக்கடை கால்வாயாக மாறி வருகிறது.இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் சென்னை போன்ற நகரங்களில் மழை வெள்ளத்தில் வீடுகள் மூழ்வது போல் காரைக்குடியிலும் மூழ்கும் அபாயம் ஏற்படும். தவிர குடிநீர் ஆதாரமும், விவசாயமும் கேள்விக்குறியாகி விடும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.கவுன்சிலர் மெய்யர் கூறுகையில்; காரைக்குடியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 5க்கும் மேற்பட்ட கால்வாய்கள் உள்ளன. இவை முறையாக துார்வாரப் படுவதில்லை. நகராட்சி சார்பில் அவ்வப்போது துார்வாரப்பட்டாலும் கால்வாய் ஆக்கிரமிப்பில் உள்ளதால் தண்ணீர் செல்ல முடியவில்லை.மழைநீர் செல்லும் கால்வாய் அடைபட்டுள்ளதால் தற்போது சிறிய மழைக்கே சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கால்வாயை முறையாக பராமரிக்க தவறினால் இன்னும் சில ஆண்டுகளில் மழைநீர் செல்ல வழியின்றி மக்கள் சிரமப்பட வேண்டி இருக்கும்.