உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேர்தல் விதிமீறலை கண்காணிக்க செயலி

தேர்தல் விதிமீறலை கண்காணிக்க செயலி

சிவகங்கை:லோக்சபா தேர்தலில் ஓட்டுக்கும் பணம் கொடுத்தல் உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதி மீறலை ஆயிரம் கண்கள் (கேமராக்கள்) கண்காணிக்கிறது என்பதை கட்சியினர், வேட்பாளர் உணர்ந்து செயல்பட வேண்டும்.தேர்தல் என்றாலே வேட்பாளர், அவரது ஆதரவு கட்சியினர் ஓட்டுக்காக பணம் வழங்குதல், பரிசு பொருள், கூப்பன் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் நடத்தை விதி மீறல்களில் ஈடுபடக்கூடும். இதை 100 சதவீதம் தடுத்து நேர்மையான தேர்தலை நடத்த வேண்டிய இடத்தில் தேர்தல் கமிஷன் உள்ளது. இதனால், மக்களோடு இணைந்து தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபடும் கட்சியினர், வேட்பாளர், அவர்களது ஆதரவாளர்களை கண்காணிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.

'சி-விஜில்' ஆப் மூலம் ஆயிரம் கண்கள்

இதற்காக 'சி-விஜில்' செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஓட்டுக்கு பணம், பரிசு கூப்பன், பொருள், மதுபானம் வழங்குதல், அனுமதியின்றி பேனர், போஸ்டர் ஒட்டுதல், பொது சொத்தை சேதம் செய்தல்,ஓட்டுப்பதிவன்று வாக்காளர்களை வாகனத்தில் அழைத்து செல்லுதல், ஓட்டுச்சாவடி உள்ள இடத்தில் இருந்து 200 மீட்டருக்குள் ஓட்டு சேகரித்தல், அனுமதித்த நேரம் தவிர்த்து மற்ற நேரத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்துதல், ஓட்டு சேகரிப்புக்கு செல்லும் போது மக்களை அழைத்து செல்லுதல் போன்ற தேர்தல் நடத்தை விதிமீறல்களை படமாகவோ, வீடியோவாகவோ எடுத்து நேரடியாக இந்த 'செயலிக்கு' அனுப்புங்கள். இந்த தகவல்கள் அனைத்தும் சட்டசபை வாரியாக நியமித்துள்ள பறக்கும் படை அதிகாரி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலைபேசிக்கு சென்றுவிடும்.

100 நிமிடத்திற்குள் 'ஆக் ஷன்'

புகார் பதிவு செய்த 100 நிமிடத்திற்குள் புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து புகார் அளித்தவர் அலைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும். இன்றைக்கு கையில் 'ஆன்ட்ராய்டு' அலைபேசி வைத்துள்ள அனைவரின் 'கேமராக்களின்' கண்களும் வேட்பாளர், கட்சியினரின் தேர்தல் பிரசாரத்தை கண்காணிக்கும் என்பதால் தேர்தல் நடத்தை விதிப்படி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட வேண்டும் என்பதில் தேர்தல் கமிஷன் விழிப்புடன் செயல்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ