குப்பையில் கிடந்த ரூ.1.80 லட்சத்தை ஒப்படைத்த ஊழியருக்கு பாராட்டு
சிவகங்கை: சிவகங்கை அருகே நாலுகோட்டை ஊராட்சியில் குப்பையில் கிடந்த ரூ.1.80 லட்சம் பணத்தை ஒப்படைத்த துாய்மை பணியாளருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.நாலுகோட்டை ஊராட்சியில் தலைவர் மணிகண்டன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு நாலுகோட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயி அர்ஜூனன் என்பவர் வீட்டில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகாக ரூ. ஒரு லட்சத்து 80 ஆயிரம் கடன் வாங்கி துணிப்பையில் வைத்தார். இதனை கவனக்குறைவாக வீட்டில் உள்ளவர்கள் குப்பையில் துாக்கி போட்டுள்ளனர்.அந்த பகுதியில் துாய்மை பணி மேற்கொண்ட சாந்தி, முத்திருளாயி என்ற இரு பெண் துாய்மை பணியாளர்கள் குப்பையை தரம் பிரிக்கும் போது பார்த்து ஊராட்சி தலைவர் மூலமாக உரியவரிடம் ஒப்படைத்தனர்.துாய்மை பணியாளர்கள் சாந்தி, முத்திருளாயியை கவுரவிக்கும் விதமாக நாலுகோட்டையில் உள்ள அனைத்து கிராம மக்களும் நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில் அவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.