உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கீழடி அகழாய்வுப்பணியை தொல்லியல் துறை தொடரவில்லை: வரலாற்று ஆய்வாளர்கள் அதிர்ச்சி

கீழடி அகழாய்வுப்பணியை தொல்லியல் துறை தொடரவில்லை: வரலாற்று ஆய்வாளர்கள் அதிர்ச்சி

கீழடியில் மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் 2015ல் நதிக்கரை நாகரீகம் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் கல்வி, மருத்துவம், விவசாயம், தொழில் துறைகளில் சிறந்து விளங்கியது கண்டறியப்பட்டது. மத்திய தொல்லியல் துறை அகழாய்வில் தாயக்கட்டை, சீப்பு, வரி வடிவ எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகள், செங்கல் கட்டுமானம், வடிகால் வசதியுடன் கூடிய கட்டடம் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டது. மூன்று கட்ட அகழாய்வுடன் மத்திய தொல்லியல்துறை நிறைவு செய்த நிலையில் தமிழகதொல்லியல் துறை அடுத்தடுத்து அகழாய்வு பணிகளில் ஈடுபட்டது. இணை இயக்குனராக இருந்த சிவானந்தம் தலைமையில் நடந்த அகழாய்வு பணிகளில் தங்க காதணி, உறைகிணறுகள், வட்டப்பானை உள்ளிட்ட ஏராளமான ஆதாரங்கள் கண்டறியப்பட்டது.தமிழக தொல்லியல் துறை 9ம் கட்ட அகழாய்வை நிறைவு செய்த நிலையில் இந்தாண்டு 10ம் கட்ட அகழாய்வை தொடங்கி இருக்க வேண்டும், ஆனால் மே மாதம் வரை அதற்கான எந்த முயற்சிகளையும் தொல்லியல் துறை எடுக்கவில்லை. வழக்கமாக ஜனவரியில் அகழாய்வு பணி தொடங்கி செப்டம்பர் வரை நடைபெறும், அதன்பின் எடுத்த பொருட்களை ஆவணப்படுத்தும் பணி நடைபெறும், ஆனால் 9ம் கட்ட அகழாய்வே பெயரளவிற்கு தான் நடந்ததாக குற்றச்சாட்டு உள்ளது. 14 குழிகள் தோண்டப்பட்டதாக தெரிவித்தாலும் ஆயிரத்திற்கும் குறைவான பொருட்களே கண்டறியப்பட்டன. 2024ம் ஆண்டு ஜனவரியில் 10ம் கட்ட அகழாய்வு தொடங்கியிருக்க வேண்டும், இன்று வரை தொடங்கப்படாததுடன் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள இடமும் தேர்வு செய்யப்படவில்லை. அகழாய்வு பணிகள் நடைபெறும் இடம் குறித்து வருவாய்துறைக்கு இதுவரை தொல்லியல் துறை கடிதம்எதுவும் அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது. எனவே 10ம் கட்ட அகழாய்வு இனி நடைபெற வாய்ப்பில்லை. தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், அகழாய்வு பணிகளுக்கு இதுவரை நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. தமிழக அரசு நிதி ஒதுக்குவதாக அறிவிப்பு மட்டும் தான் வெளியிட்டது. மற்றபடி நிதி ஒதுக்கவில்லை. கடந்த கால கட்டங்களில் ஒதுக்கப்பட்ட நிதி குறித்த அறிக்கையை தயாரித்து வருகிறோம். எனவே 10ம் கட்ட அகழாய்வு இனி நடைபெறாது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ