விருது பெறும் அரியக்குடி அரசு பள்ளி
சிவகங்கை: காரைக்குடி அருகே உள்ளது அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி. 900 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியானது கல்வியில் மட்டுமின்றி கலை, இலக்கியம், பண்பாடு , விளையாட்டு என்று அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்குகிறது.பசுமைப்பள்ளி விருது, அண்ணா தலைமைத்துவ விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இப்பள்ளி, தற்போது பேராசிரியர் அன்பழகனார் விருது பெற்றுள்ளது. இவ்விருது ரூ. ஒரு லட்சம் பணமுடிப்பும்,கேடயமும் கொண்டது.பேராசிரியர் அன்பழகனார் நுாற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு மாநில அளவில் சிறந்து விளங்கும் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து இவ்விருதை வழங்குகிறது. சிவகங்கை மாவட்டத்தில் இருந்து அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 6 திருச்சியில் உள்ள தேசியக் கல்லுாரியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இவ்விருதை வழங்குகிறார்.