மாவட்டத்தில் சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர் திருவீதி உலா நடந்தது.இக்கோயிலில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து திருநாள் மண்டபத்தில் உற்ஸவர் நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் நடராஜருக்கு அலங்காரம் நடந்தது. பின்னர் மாணிக்கவாசகருக்கு பரிவட்டம் கட்டப்பட்டு உட்பிரகாரம் வலம் வந்தார். தொடர்ந்து ஓதுவார் மாசிலாமணிக்கு பரிவட்டம் கட்டி திருவாசகம் 21 பதிகம் பாட மூலவருக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் உற்ஸவருக்கு தீபாராதனை நடந்து திருவீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.* சிவகங்கை காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் நேற்று காலை சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. கோயில் வளாகத்தில் நடராஜர், அம்பாள், மாணிக்கவாசகருடன் எழுந்தருளினர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சுவாமி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர். தேவஸ்தான நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.* மானாமதுரை, இளையான்குடியில் உள்ள சிவாலயங்களில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் உள்ள நடராஜர் சன்னதியில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 3:00 மணிக்கு சுவாமிக்கும்,அம்மனுக்கும் நவதிரவிய அபிேஷகம் நடந்தது. உற்ஸவர் சுவாமிகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வேம்பத்தூர் கைலாசநாதர்,ஆவுடைய நாயகி அம்மன் கோயில், குறிச்சி காசி விஸ்வநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.*இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற விழாவில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இளையான்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சாலை கிராமத்தில் உள்ள வரகுனேஸ்வரர் கோயிலிலும் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு பூஜைகள்,தீபாராதனைகள் நடைபெற்றன.