தடை செய்யப்பட்ட பாலிதீன் பை, குட்கா விற்பனை தாராளம்: அதிகாரிகள் பெயரளவில் நடவடிக்கை எடுப்பதாக புகார்
இளையான்குடி: இளையான்குடி, மானாமதுரை பகுதியில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் மற்றும் போதை வஸ்துகளான குட்கா உள்ளிட்ட பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுக்கவேண்டிய அதிகாரிகள் கண்துடைப்பாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பாலிதீன் பொருட்களுக்கு 2019ம் ஆண்டு அரசு தடை விதித்தது. இதே போன்று குட்கா பொருட்களுக்கும் தடை விதித்துள்ளனர். இதையடுத்து நகர பகுதி களில் ஓரளவிற்கு உணவு பாதுகாப்புத்துறை மற்றும் போலீசார் அவ்வப்போது சோதனை செய்து இதனை கட்டுப்படுத்த நட வடிக்கை எடுத்து வரு கின்றனர். ஆனால் கிராம பகுதிகளில் இவற்றின் புழக்கம் அதிகமாக இருப்பதினால் அனைத்து தரப்பினருக்கும் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற் படுகிறது. இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 55 ஊராட்சிகளில் 300க்கும் மேற்பட்ட கிராமங்களும், மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 39 ஊராட்சிகளில் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களில் உள்ள மளிகை, ஓட்டல்கள், பேக்கரி, இறைச்சி மற்றும் காய்கறி கடைகளில் பாலிதீன் பைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளன. இவை பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாது, மண்ணின் காற்றோட்டத்தையும், நீர்மட்டத்தையும், வளத்தையும் குறைப்பதால் பயிர்கள் நன்கு வளர முடியாமல் உற்பத்தி குறையும். கால்நடைகள் குப்பைகளில் கிடக்கும் பாலிதீன் கழிவு களை உண்ணும் போது அவற்றின் குடல் அடைக்கப்பட்டு மரணம் ஏற் படுகிறது. பாலிதீன் குப்பைகள் நீர்நிலைகளில் சேரும்போது நீர் மாசுபடுகிறது. சில கிராமங்களில் பாலிதீன் கழிவு குப்பைகளை எரிக்கும் போது காற்றில் பரவி மூச்சுத் திணறல், சுவாச கோளாறு ஏற்படுகிறது. இது போன்ற பிரச்னைகள் ஏற்படு கிறது. அதே போன்று கிராம பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களும் சர்வ சாதாரணமாக கிடைப்பதினாலும் மனிதர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் மூலம் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது: நகர பகுதிகளில் அவ்வப் போது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ரோந்து செல்வதினால் பாலிதீன் ம ற்றும் குட்கா பொருட்கள் விற்பனை சற்று குறைந்து உள்ளது. ஆனால் கிராமங்களில் ரோந்து இல்லாத காரணத்தினால் இவற்றின் புழக்கம் அதிகரித்து விட்டன. தமிழக அரசு இது குறித்து விழிப்புணர்வு அளித்து பாலிதீன் பயன்பாடு, குட்கா போன்ற போதை வஸ்துகள் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என்றனர்.