உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துாரில் அவசர, விபத்து சிகிச்சை மையம் துவக்கிய முதல்வர் ஸ்டாலின்

திருப்புத்துாரில் அவசர, விபத்து சிகிச்சை மையம் துவக்கிய முதல்வர் ஸ்டாலின்

திருப்புத்துார்: திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. தாலுகா தலைமை மருத்துவமனையாக 1974 முதல் திருப்புத்துாரில் அரசு மருத்துவமனை செயல்படுகிறது. திருப்புத்துார் முக்கிய போக்குவரத்து மையமாக உள்ளதால் இந்த மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் துவங்க கோரப்பட்டது.இதனையடுத்து மருத்துவமனை வளாகத்தில் இரு அடுக்குகளாக தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தை சிவகங்கையில் நேற்று நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த மையத்தில் தரை தளத்தில் 24 படுக்கை வசதியுடன் சிகிச்சை மையம் உள்ளது. முதல் தளத்தில் அறுவைசிகிச்சை அரங்கம் உள்ளது. காயம், நோயின் தன்மைக்கேற்ப சிவப்பு,பச்சை,மஞ்சள் என்று மூன்று நிலைகளில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. சுகாதாரத்துறை இணை இயக்குநர் தர்மர் நேற்று பார்வையிட்டு மையத்தை செயல்படுத்த அறிவுறுத்தினார்.அவரிடம் இந்த மையத்தில் சிகிச்சைக்கு தேவையான எலும்பு டாக்டர் நியமனம், கூடுதல் செவிலியர்,அறுவைசிகிச்சை உதவியாளர், சிடி ஸ்கேன் வசதி, நோயாளிகள் வசதிக்கு மேற்கத்திய கழிப்பறை, துணிகளை பராமரிக்க சலவைத் தொழிலாளி மற்றும் சுகாதார பணியாளர் நியமிக்க கோரப்பட்டுள்ளது. மேலும் தற்போது அரசு மருத்துவமனை வளாகம் பொது சிகிச்சை, பிரசவ வார்டு தற்போது அவசர சிகிச்சை மையம் என்று 3 கட்டடங்களாக உள்ளதால், பொதுமக்கள் எக்ஸ்ரே, லேப் வசதிக்கு வேறு கட்டடத்திற்கு மாற வேண்டியுள்ளது. இதனால் மூன்று கட்டடங்களையும் சீரான உயரத்தில் இணைக்கும் பாதை அமைக்கவும் கோரப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ