சிவகங்கையில் ரூ.1.07 கோடியில் மருது சகோதரர்கள் சிலை முதல்வர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்
சிவகங்கை : சிவகங்கையில் இன்று முதல்வர் ஸ்டாலின் ரூ.1.07கோடிக்கு மருது சகோதரர்கள், ரூ.50 லட்சத்திற்கு கவிஞர் முடியரசனுக்கு சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுகிறார்.முதல்வர் ஸ்டாலின் நேற்று காரைக்குடி அழகப்பா பல்கலையில் நுாலகம், திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து உரையாற்றினார்.இன்று காலை 9:00 மணிக்கு காரைக்குடியில் இருந்து கார் மூலம் சிவகங்கைக்கு வருகிறார். வரும் வழியில் குன்றக்குடி, திருப்புத்துார், அரளிக்கோட்டை, ஒக்கூர், சிவகங்கை உள்ளிட்ட இடங்களில் கட்சியினர் முதல்வருக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர்.காலை 11:00 மணிக்கு சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரி வளாகத்தில் அமைத்துள்ள மேடைக்கு வரும் அவர், ரூ.1.07 கோடியில் வேலுநாச்சியார் மணி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட உள்ள மருது சகோதரர்கள் மற்றும் ரூ.50 லட்சத்தில் காரைக்குடியில் கவிஞர் முடியரசனுக்கு சிலை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டுகிறார். நகரம்பட்டியில் ரூ.50 லட்சத்தில் கட்டிய சுதந்திரபோராட்ட வீரர் வாளுக்கு வேலி சிலையை திறக்கிறார்.பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். கலெக்டர் ஆஷா அஜித் வரவேற்புரை ஆற்றுகிறார்.அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் அமைச்சர்கள், கட்சியினர் விழாவில் பங்கேற்கின்றனர். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி நன்றி கூறுகிறார். ஏற்பாடுகளை அனைத்து துறையினர் செய்து வருகின்றனர்.