அரசு மாணவிகள் விடுதியில் மதமாற்ற முயற்சியா வார்டன் மீது கலெக்டரிடம் புகார்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அரசு விடுதியில், பைபிள் வாசிக்குமாறு மாணவிகளை வற்புறுத்துவதோடு, மதம் மாற்ற முயற்சிப்பதாக வார்டன் லட்சுமி மீது புகார் எழுந்துள்ளது. காளையார்கோவில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் எதிரே அரசு மாணவிகள் விடுதி உள்ளது. இங்கு 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் 68 பேர் தங்கியுள்ளனர்.வார்டனாக காரைக்குடியை சேர்ந்த லட்சுமி பணிபுரிகிறார். தனது மகளை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் முயற்சியில் லட்சுமி ஈடுபடுவதாக, மருதங்கநல்லுாரை சேர்ந்த மணிமேகலை என்பவர் கலெக்டர் பொற்கொடியிடம் புகார் அளித்தார். மணிமேகலை கூறியதாவது: மாணவிகளை தினமும் பைபிள் வாசிக்க செய்து, கடவுள் வணக்க கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனவும் வற்புறுத்தினார். மதம் மாற்றும் முயற்சியில் வார்டன் ஈடுபட்டு வருகிறார். அழுகிய காய்கறிகளை பயன்படுத்தி சமைக்கின்றனர். இது குறித்து கலெக்டரிடம் புகார் செய்தேன் என்றார். புகார் வந்த பின் 'பைபிள்' வாசிக்கவில்லை லட்சுமி கூறியதாவது: காலாண்டு, அரையாண்டு தேர்வின் போது, பைபிள் வைத்து கடவுள்வணக்கம் பாடச் சொன்னோம். புகார் எழுந்தபின் நிறுத்திவிட்டோம். இப்புகார் குறித்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்திலும் எழுத்துப்பூர்வ விளக்கம் அளித்து விட்டேன். மாணவிகளுக்கு தரமான சாப்பாடு வழங்கப்படுகிறது. சமையலர் பணியிடம் மாற்றம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில், என் மீது புகார் தெரிவிக்கின்றனர் என்றார். மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலக அதிகாரி கூறியதாவது: மாணவிகளை மதம் மாற்றம் செய்வதாக, கலெக்டருக்கு புகார் வந்ததை அடுத்து விசாரணை செய்து, வார்டனிடம் இனிமேல் இது போன்ற விஷயங்களில் ஈடுபடக்கூடாது என எழுதி வாங்கிவிட்டோம். இன்னும் 4 மாதத்தில் பணி ஓய்வு பெற உள்ளதால் எச்சரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.