மேலும் செய்திகள்
கிடப்பில் பாலம் கட்டும் பணி
20-Mar-2025
திருப்புவனம்: திருப்புவனம் அருகே லாடனேந்தல் - மணல்மேடு இடையே பாலம் கட்டுமான பணிகள் மந்த கதியில் நடந்து வரும் நிலையில் தற்காலிக பாதை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மணல்மேடு, பெத்தானேந்தல், சடங்கி உள்ளிட்ட கிராம மக்கள் திருப்புவனம் வருவதற்கு மடப்புரம் வழியாக 10கி.மீ., தூரம் சுற்றி வரவேண்டும். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், விவசாயிகள் என பலரும் மணல்மேடு அருகே வைகை ஆற்றில் இறங்கி நடந்து லாடனேந்தல் வந்து திருப்புவனம் செல்வது வழக்கம். எனவே மணல்மேடு, லாடனேந்தல் இடையே பாலம் அமைத்தால் மூன்று கி.மீ., தூரத்திற்கு பாலம் அமைக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி 'நபார்டு வங்கி' நிதியுதவியுடன் பாலம் கட்ட தமிழக அரசு முடிவு செய்து கடந்த 2022 ஜூலை மாதம் பாலம் கட்டுமான பணிகள் தொடங்கின. ரூ.18.70 கோடி செலவில் 374 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம், 17 தூண்களுடனும் பாலம் கட்டும் பணி தொடங்கின. இப்பணி தொடங்கி 2 ஆண்டுகள் முடிந்த நிலையில் இன்னமும் பாலம் கட்டி முடிக்கப்படவில்லை. லாடனேந்தலில் மாரநாடு கால்வாயின் குறுக்கே தூண்கள் அமைக்கும் பணி மட்டும் ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. கால்வாயின் அடுத்த பகுதியில் பட்டா நிலம் வருவதால் பணிகள் தாமதம் ஆவதாக கூறப்படுகிறது. இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:பாலம் பணிகள் நடந்து வந்தாலும் கீழ்ப்பகுதியில் இருசக்கர வாகனங்கள் சென்று வர பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். நீர் வரத்து இருப்பதால் சிமின்ட் குழாய்கள் பதித்துள்ளனர். அதில் நடந்து செல்ல வசதியாக பாதை அமைத்து தர வேண்டும்.மேலும் பாலம் கட்டுமான பணிகள் முடிவடைந்தாலும் லாடனேந்தல் கிராமத்தினுள் 100 மீட்டர் தூரத்திற்கு வெறும் 1.5 மீட்டர் அகலம் கொண்ட பாதைதான் உள்ளது. எனவே இருபுறமும் கூடுதலாக நிலம் கையகப்படுத்தப்பட்டால் மட்டுமே பாலம் பயன்படுத்த முடியும். இல்லையென்றால் பாலப்பணிகள் முடிந்தாலும் டூவீலர், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே சென்று வர முடியும், என்றனர். இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறியதாவது:பாலம் பணிகள் தொடங்கியதில் இருந்தே மழை, வைகை ஆற்றில் நீர்வரத்து, தொழிலாளர்கள் தட்டுப்பாடு என பல்வேறு பிரச்சனைகள், கட்டுமான பொருட்கள் கொண்டு வரவும் உரிய சாலை வசதி இல்லை. கடும் சிரமத்திற்கு இடையே பணிகள் நடந்து வருகிறது. இடம் கையகப்படுத்துவதிலும் சிக்கல் உள்ளதால் பணிகள் தாமதம் ஆகின்றன. கிராமமக்கள் கோரிக்கையை அடுத்து தற்காலிக பாதை அமைக்கப்படும், என்றார்.
20-Mar-2025