கிராமங்களில் விடுபட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு கவுன்சிலர்கள் கோரிக்கை
திருப்புத்துார்: திருப்புத்துார் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் வார்டுகளில் ஊராட்சி வாரியாக விடுபட்ட பணிகளை செய்ய போதிய நிதி ஒதுக்க கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.திருப்புத்துார் ஊராட்சி ஒன்றியத்தின் புதிய அலுவலகத்தில் முதல் கூட்டம் நடந்தது. தலைவர் சோ.சண்முகவடிவேல் தலைமை வகித்தார். பி.டி.ஓ.,சத்யன், துணைத் தலைவர் மீனாள் முன்னிலை வகித்தனர். ஏ.பி.டி.ஓ.,சேதுராமன் வரவேற்றார். ஏ.பி.டி.ஓ.,மாணிக்கவாசகம் தீர்மானங்களை வாசித்தார்.தொடர்ந்து கவுன்சிலர்கள் கோரிக்கை குறித்து பேசினர்.தலைவர்: புதிய அலுவலகக் கட்டடம் கட்ட ரூ 4.72 கோடி அனுமதி அளித்த முதல்வர், அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோருக்கு நன்றி. மீதமுள்ள மூன்று மாதங்களில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து கவுன்சிலர்கள் பேசலாம்.ராமசாமி (தி.மு.க.,): கடந்த 5 ஆண்டுகளில் ஓரளவு பணிகளை நிறைவேற்றியுள்ளோம். அடுத்த குறுகிய காலத்தில் வேகமாக பணிகள் நிறைவேற ஒத்துழைக்க வேண்டும். ஐந்து ஆண்டுகளாக வலியுறுத்தியும் வனப்பகுதியில் செல்லும் வேலங்குடி-மகிபாலன்பட்டி, வேலங்குடி-கொன்னத்தான்பட்டி உள்ளிட்ட ரோடுகள் இன்றளவும் நிறைவேற்றப்படவில்லை. அதற்கு விரைவாக அனுமதி அளிக்க வேண்டும்.பழனியப்பன் (அ.தி.மு.க.,): வடக்கூர்-, திருக்களம்பூர் ரோட்டில் புதுக்கோட்டை பகுதியில் ரோடு போடப்பட்டுள்ளது. நமது மாவட்ட பகுதியில் வனத்துறை அனுமதிக்காததால் போடவில்லை. தெக்கூர் அய்யனார் கோயில் ரோடு, குலாலர் தெரு ரோடுகள் போட வேண்டும்.சகாதேவன் (தி.மு.க.,): வார்டு வாரியாக நலத்திட்டங்கள் நிறைவேற்ற அமைச்சரிடம் கூடுதலாக நிதி ஒதுக்கீடு பெற வேண்டும்.தலைவர்: கவுன்சிலர்கள் ரூ 5 லட்சம் பங்களிப்பு செய்தால் வார்டுக்கு ரூ 15 லட்சம் வீதம் நமக்கு நாமே திட்டத்தில் நிறைவேற்றலாம்.கருப்பையா (தி.மு.க.,): எங்கள் பகுதியில் காலனி வீடுகளுக்கான மனைகளுக்கு பட்டா வழங்க கோரி உங்களை தேடி முதல்வர் முகாமில் மனு கொடுத்தோம். வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. பூலான்பட்டி ரோடு ஐந்து ஆண்டுகளாக போடாமல் உள்ளது.தலைவர்: விரைவில் பட்டா வழங்குவார்கள். மண்ரோடாக உள்ளது. விரைவில் வேலைக்குறுதி திட்டத்தில் ரோடு உருவாக்கப்படும்.டி.பி.டி.ஓ.,சரவணக்குமார் நன்றி கூறினார். கவுன்சிலர்கள் கலைமாமணி, சுமதி, பாக்யலெட்சுமி, ராமேஸ்வரி துறை அலுவலர்கள், ஒன்றிய அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.