உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தினசரி மார்க்கெட் வியாபாரிகள் நகராட்சி தலைவரிடம் முறையீடு

தினசரி மார்க்கெட் வியாபாரிகள் நகராட்சி தலைவரிடம் முறையீடு

தேவகோட்டை: தினசரி மார்க்கெட் வியாபாரிகள் இடம் கேட்டு நகராட்சி தலைவரிடம் முறையிட்டனர்.தேவகோட்டை பஸ் ஸ்டாண்டை ஒட்டி தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட கடைகள் 65 உட்பட 200 நடை பாதை கடைகள் உள்ளன. தற்போதுள்ள பஸ் ஸ்டாண்டில் இடப் பற்றாக்குறை காரணமாக, தற்போது உள்ள பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் இரண்டையும் இடித்து விட்டு புதிதாக ரூ.12.81 கோடியில் புது பஸ் ஸ்டாண்ட், வேறு ஒரு இடத்தில் ரூ 8.21 கோடியில் தினசரி மார்க்கெட் கட்ட டெண்டர் விடப்பட்டு அடிக்கல் நாட்டு விழாவும் ஜூன் 11 ல் முடிந்து விட்டது. விரைவில் பணிகள் துவங்க உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் நகராட்சி தலைவரிடம் பஸ் ஸ்டாண்டை ஒட்டி தங்களுக்கு இடம் ஒதுக்கி தரக் கோரினர். நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் பெரியார் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது. பஸ் ஸ்டாண்டை ஒட்டியே மினி மார்க்கெட்டாக இடம் ஒதுக்கி தரக்கோரியும் தாங்களே கடைகளை அமைத்து கொள்வதாகவும் வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.கமிஷனர் கூறுகையில், புது மார்க்கெட் கட்டும் வரை சிலம்பணி ஊருணி பகுதியில் கடைகள் அமைத்துக் கொள்ள வேண்டும். பஸ் ஸ்டாண்ட் வரைபடம் அனைத்து நிலையிலும் அங்கீகரிக்கப்பட்டு விட்டது. தலைமை பொறியாளர் அனுமதி வழங்கி விட்டார். தலைமை பொறியாளர் தான் இனி மாற்றம் செய்ய முடியும். தலைமை பொறியாளர் வந்து பார்வையிட்டு தான் இடிக்க உள்ளோம். இரு வாரத்திற்குள் பொறியாளர் வர உள்ளார். அவரிடம் தான் பேச வேண்டும் என்றார். இதனைத் தொடர்ந்து வியாபாரிகள் கலைந்து சென்றனர்.அதிகாரிகளிடம் விசாரித்ததில், அளவெல்லாம் குறிப்பிட்டு டெண்டர் விடப்பட்டு விட்டது. கடைகளுக்கு இடம் ஒதுக்கினால் நடைபாதை உட்பட குறைந்தது எட்டு சென்ட் இடம் தேவைப்படும். வரைபடத்தில் சிறு மாற்றம் இருந்தாலும் மறு டெண்டர் விட வேண்டும். எனவே இதற்கு வாய்ப்பில்லை என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி