| ADDED : பிப் 10, 2024 04:50 AM
திருப்புவனம்: தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க வந்தனர். பாதுகாப்பிற்காக போலீசார் நான்கு ரத வீதிகளிலும் டூவீலர்கள், கார்களை அனுமதிக்கவில்லை.இதனால் மக்கள் சிரமமின்றி திதி, தர்ப்பணம் கொடுத்து விட்டு வழிபட்டு சென்றனர். பக்தர்கள் அமர்ந்து திதி, தர்ப்பணம் கொடுக்க எந்த ஏற்பாடுகளும் இல்லை. வைகை ஆற்றினுள் குப்பைக்கு நடுவில் பக்தர்கள் அமர்ந்து திதி, தர்ப்பணம் வழங்கினர்.* குறிச்சி காசி விஸ்வநாதர் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு நேற்று அதிகாலை சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, அபிஷேக ஆராதனை நடந்தது.மானாமதுரை, பரமக்குடி, இளையான்குடி மற்றும் மதுரை ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.தேவகோட்டை: தேவகோட்டை அருகே பட்டுக்குருக்கள் நகர் பிருத்தியங்கிரா தேவி கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு நிகும்பல யாகம் நடந்தது. நித்திய கல்யாணிபுரம் சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயில், புவனேஸ்வரி அம்மன் கோயில், கல்லாம்பிரம்பு காளியம்மன் கோயில், சுந்தர விநாயகர், ஆலமரத்து முனீஸ்வரர் காளியம்மன்,மாரியம்மன் கோயிலில் அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தன. தை வெள்ளி, திருவோணத்தை முன்னிட்டு ரங்கநாத பெருமாள் கோயிலில் காலையில் விஷ்ணு ஹோமம் தொடர்ந்து மூலவர், ஹனுமாருக்கு சிறப்பு திருமஞ்சனம் சிறப்பு அலங்கார பூஜை நடந்தன.ஊஞ்சல் சேவையும் பெண்கள் விளக்கேற்றி பூஜை செய்து வழிபட்டனர்.