பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா தேரோட்டம் மழையிலும் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் இன்று காலை சதுர்த்தி தீர்த்தவாரி
திருப்புத்துார்:பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று மாலை நடந்த தேரோட்டத்தில் கற்பகவிநாயகர் தேரில் வலம் வந்தார். தொடர்ந்து புதிய தேரில் சண்டிகேஸ்வரர் வலம் வந்தார். கொட்டும் மழையிலும் பக்தர்கள் வடம் பிடித்தனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று காலை திருக்குளத்தில் சதுர்த்தி தீர்த்தவாரி உற்ஸவம் நடைபெறும். நகரத்தார் கோயிலான இங்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பத்து நாள் திருவிழா ஆக.,18ல் துவங்கியது. ஒன்பதாம் நாளை முன்னிட்டு காலை 9:00 மணி அளவில் பெரிய தேரில் கற்பகவிநாயகரும், புதிய சிறிய தேரில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளினர். தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்து பக்தர்கள் தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 4:30 மணிக்கு மூலவருக்கு சிவாச்சாரியார்களால் சிறப்பு வழிபாடு நடந்து சந்தன அலங்காரத்தில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. மாலை 5:38 மணிக்கு பக்தர்கள் பங்கேற்க தேரோட்டம் துவங்கியது. சண்டிகேஸ்வரர் எழுந்தருளிய புதிய தேரை பெண்கள், சிறுவர்,சிறுமியர் உற்சாகத்துடன் இழுத்தனர். தேரோட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் மழை பெய்யத்துவங்கியது. மழையில் நனைந்தபடி பக்தர்கள் தேரை இழுத்தனர். மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இரவு வரை தரிசித்தனர். இரவில் யானை வாகனத்தில் விநாயகர் திருவீதி உலா நடந்தது. இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலை 10:00 மணிக்கு கோயில் திருக்குளத்தில் தெற்கு படித்துறையில் அங்குசத்தேவருக்கு சிவாச்சாரியார்களால் தீர்த்தவாரி நடைபெறும். உச்சிக்கால பூஜையில் மதியம் 1:00 மணிக்கு மேல் மூலவருக்கு முக்கூருணி மோதகம் படையலிடப்படும். இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவுடன் விழா நிறைவடைகிறது.