உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சம்பா சாகுபடியை துவக்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு

சம்பா சாகுபடியை துவக்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு

திருப்புவனம் : திருப்புவனம் தாலுகாவில் சம்பா சாகுபடிக்காக விவசாய பணிகளை தொடங்க விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மழவராயனேந்தல், இலந்தைகுளம், கட்டமன்கோட்டை, கொந்தகை, கீழடி உள்ளிட்ட பகுதிகளில் சம்பா சாகுபடி காலத்தில் மூவாயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெறும், வைகை ஆற்றுப்பாசனம் என்பதால் விவசாயிகள் செப்டம்பரில் தொடங்கும் வடகிழக்கு பருவமழையை நம்பி நெல் நடவு செய்வார்கள். அக்., நவ.,-ல் வைகை அணையில் இருந்து சாகுபடிக்காக தண்ணீர் திறப்பது வழக்கம். ஏற்கனவே மழை காரணமாக கண்மாயில் தண்ணீர் இருக்கும். அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரையும் இருப்பு வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்துவார்கள். இந்தாண்டு பெரும்பாலான விவசாயிகள் பணிகளை தொடங்கவே இல்லை. இலந்தைகுளம், மேலவெள்ளூர், கொந்தகை, கலியாந்தூரில் மோட்டார் பம்ப்செட் வைத்துள்ள விவசாயிகள் மட்டுமே நிலங்களை உழவு செய்து வருகின்றனர். இலந்தைகுளம் கண்மாய் உள்ளிட்ட கண்மாய்களில் தண்ணீரே இல்லை. வேறு வழியின்றி வைகையில் வரும் சாக்கடை தண்ணீரை பிரமனூர் கண்மாய் உள்ளிட்ட கண்மாய்களுக்கு விவசாயிகள் திருப்பி வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது, கண்மாயில் தண்ணீர் இருந்தால் எல்லா விவசாயிகளும் பணிகளை தொடங்குவார்கள். ஒருசிலர் மட்டும் பணிகளை தொடங்கினால் இழப்பு அதிகமாக இருக்கும். வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இதனால் பயந்து கொண்டே விவசாய பணிகளை தொடங்கவில்லை என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !