சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், கண்டுபட்டி பழைய அந்தோணியார் சர்ச்சில் பொங்கல் விழாவில் சர்வ மதத்தினர் பொங்கல் வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர். மஞ்சுவிரட்டில் 653 காளைகள் அவிழ்த்துவிட்டதில், காளை முட்டி ஒருவர் பலியானார். 119 பேர் காயமடைந்தனர்.கண்டுபட்டி பழைய அந்தோணியார் கோயிலில் தை 5ல் பொங்கல் விழா நடைபெறும். அன்றைய தினமும் அனைத்து சமுதாயத்தினரும் பழைய அந்தோணியார் சர்ச் முன் பொங்கல் வைத்தும், சர்ச்சில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தும் வழிபடுவர். மேலும் கண்டுபட்டி மெயின் ரோட்டில் உள்ள புதிய அந்தோணியார் சர்ச் முன்பாகவும் பொங்கல் வைத்து வழிபட்டனர். குழந்தை வரம் வேண்டி விரதம் இருந்தவர்கள், கரும்பு தொட்டில் கட்டிஆலயத்தை வலம் வந்து நேர்த்தி செலுத்தினர். புதிதாக திருமணம் ஆனவர்கள் ஜோடியாக ஒன்று கூடி பொங்கல் வைத்து வழிபட்டனர்.* வீடுதோறும் சைவ உணவு :கண்டுபட்டி எஸ்.ஆர்த்தி கூறியதாவது: பல நுாறு ஆண்டுகளாக பாரம்பரியமாக பழைய அந்தோணியார் சர்ச்சில் பொங்கல் விழா நடைபெறும். இந்த விழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் வருவர். மேலும் மஞ்சுவிரட்டை காண குவிந்து விடுவர். அவர்கள் பசியின்றி விழாவை கண்டு செல்லும் விதமாகவே வீடுகள் தோறும் சைவ உணவு சமைத்து வைத்து, அந்தந்த வீடுகள் முன் நின்று ரோட்டில் செல்வோரை அன்போடு அழைத்து வந்து உணவு பரிமாறுவோம். இது பாரம்பரியமாக கண்டுபட்டியில் நடைபெற்று வருகிறது. தை மாதத்தில் ஐயப்பன், முருகனுக்கு விரதம் இருப்பார்கள். அவர்களுக்காகவே சைவ உணவு மட்டுமே பரிமாறுகின்றோம், என்றார்.* மஞ்சுவிரட்டில் பலி 1, காயம் 119:நேற்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ஊத்திக்குளம், மேலக்காடு, கண்டுபட்டி திறந்தவெளி பொட்டலில் 550 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஊத்திக்குளம் அருகே கோவினிபட்டி பூரணம் மகன் பூமிநாதன் 50, தனது காளையை அவிழ்த்து விட்டார். அந்த காளை அவர் கழுத்தில் குத்தியது. அதில் பலத்த காயத்துடன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானார். காளைகள் முட்டியதில் 119 பேர் காயமுற்றனர். இவர்களில் 25 பேரை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கூட்டத்தை கலைத்து விட்டு ஜீப்பிற்கு சென்ற காரைக்குடி போலீஸ்காரர் சிவகங்கை அருகே கீழவாணியங்குடியைச் சேர்ந்த உடையனசாமி 50, முதுகில் காளை குத்தியதில் காயமுற்றார். தொழுவில் பதிவு செய்த 103 காளைகளுக்கு கால்நடைத்துறை இணை இயக்குனர் கார்த்திகேயன், உதவி இயக்குனர் நாகராஜன் தலைமையில் பரிசோதனை செய்தனர். இக்காளைகளை அடக்க 47 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்தனர். காயமுற்றவர்களுக்கு காளையார்கோவில் நிலைய மருத்துவ அலுவலர் ராகவேந்திரர் தலைமையில் 12 மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். மதியம் 3:00 மணிக்கு கலெக்டர் ஆஷா அஜித் உறுதிமொழி வாசிக்க அமைச்சர் பெரியகருப்பன் மஞ்சுவிரட்டை துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், கோட்டாட்சியர் சுகிதா, தாசில்தார் ராஜரத்தினம், வட்ட வழங்கல் அலுவலர் மகேஸ்வரன் பங்கேற்றனர். சிவகங்கை எஸ்.பி., பி.கே.அர்விந்த் தலைமையில் 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பார்வையாளர்கள் ஏமாற்றம்:
* கண்டுபட்டி திறந்தவெளி பொட்டலில் நடக்கும் மஞ்சுவிரட்டை திறந்த வாகனத்தில் நின்று பார்த்து ரசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். இந்த முறை திறந்த வெளி பொட்டலுக்கு செல்ல சரக்கு வாகனங்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் மஞ்சுவிரட்டை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். திறந்த வெளி பொட்டலில் காளைகளை அவிழ்க்க போலீசார் கட்டுப்பாடு விதித்ததால், காயமுற்றோர் எண்ணிக்கை குறைந்தது.//