கண்டக்டரை விட்டு புறப்பட்ட அரசு பஸ்
தேவக்கோட்டை : தேவகோட்டையிலிருந்து காளையார்கோவிலுக்கு சென்ற அரசு டவுன் பஸ்சில், கண்டக்டர் இல்லாததால், பயணியர் அதிர்ச்சி அடைந்தனர்.சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டையில் இருந்து தினமும் காலை, 8:40 மணிக்கு புறப்படும் டவுன் பஸ், சருகணி வழியாக காளையார்கோவில் வந்து செல்லும். நேற்று, பஸ்சின் டிரைவராக ராமநாதன், கண்டக்டராக ரஞ்சித் சிங் இருந்தனர். நேற்று காலை பஸ்சில் கண்டக்டர் இருக்கிறாரா என உறுதி செய்யாமல் டிரைவர் பஸ்சை எடுத்துவிட்டார்.சில கி.மீ.,யில் திருமணவயல் பஸ் ஸ்டாப்பில் இறங்க வேண்டிய பயணியர் டிக்கெட் எடுக்க தேடியபோது, கண்டக்டர் இல்லாதது தெரியவந்தது. தேவக்கோட்டையில் இருந்து உப்பூர் புறப்பட்ட அடுத்த பஸ்சில் கண்டக்டர் ஏறி வந்து, திருமணவயலில் தன் பஸ்சை பிடித்தார். தேவக்கோட்டை கிளை மேலாளர் சண்முகசுந்தரம் கூறுகையில், ''இதுகுறித்து எனக்கு தகவல் தெரியப்படுத்தவில்லை. விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.