உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சூறாவளியுடன் பலத்த மழை  சிவகங்கையில் தொடர் மின்வெட்டு  இரவில் துாக்கம் தொலைத்த மக்கள் 

சூறாவளியுடன் பலத்த மழை  சிவகங்கையில் தொடர் மின்வெட்டு  இரவில் துாக்கம் தொலைத்த மக்கள் 

சிவகங்கை: சிவகங்கையில் நேற்று முன்தினம் சூறாவளி யுடன் பலத்த மழை பெய்ததால், மரங்கள் சாய்ந்தன. நேற்று முன்தினம் இரவு நகரில் பல மணி நேரம் மின்வெட்டு நீடித்தது.அக்னி நட்சத்திரம் மே 4ம் தேதி தொடங்கியது. அக்னி நட்சத்திரம் துவங்கிய நாளிலேயே பகலில் கடும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. அதே நேரம் நேற்று முன்தினம் மாலை 5:45 மணிக்கு திடீர் சூறாவளி, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சிவகங்கை நகரில் பல்வேறு இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. சூறாவளியுடன் பலத்த மழை பெய்ததால், நகரில் பெரும்பாலான இடங்களில் மரங்கள் மின்கம்பங்களின் மீது விழுந்தது. இதனால் நேற்று முன்தினம் மாலை 6:45 முதல் இரவு 8:35 மணி வரையிலும் பல முறை மின்தடை ஏற்பட்டது.சிவகங்கை போலீஸ் பீட் அருகே அதிகளவில் மரங்கள் மின்கம்பங்களின் மீது விழுந்ததால், அவற்றை மீட்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால், சிவகங்கை நகர் பகுதியில் இரவு 9:00 மணி முதல் தொடர் மின்வெட்டும், அடிக்கடி மின்சாரம் வந்து போவதுமாக நள்ளிரவு வரை பிரச்னை நீடித்தது. இதனால் சிவகங்கை மக்கள் துாக்கத்தை தொலைத்தனர்.இயற்கை பேரிடர் காலங்களில் மின்வெட்டு ஏற்பட்டால், அவற்றை உடனுக்குடன் சரி செய்ய மின்வாரியம் போதிய ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி சிவகங்கையில் அதிகபட்சமாக 49.60 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்து திருப்புவனத்தில் 16.20, இளையான்குடியில் 2, திருப்புத்துாரில் 1.40 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ