| ADDED : மே 13, 2024 12:25 AM
காரைக்குடி : காரைக்குடி அருகே இலுப்பக்குடி தெற்கு குடியிருப்பில் பாலம் கட்டும் பணி பாதியில் நிற்பதால்,ரோடு புதுப்பிக்கும் பணி கிடப்பில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இலுப்பக்குடி ஊராட்சி, காரைக்குடி மாநகருக்கு அருகில் உள்ள ஆன்மிக தலமுள்ள ஊராட்சி ஆகும். இப்பகுதியில் புதிதாக அதிகளவில் வீடுகள் கட்டி குடியேறி வருகின்றனர். நகருக்கு இணையாக வளர்ந்து வரும் ஊராட்சியாக உள்ளது. இந்த ஊராட்சி பகுதியில் படிப்படியாக ரோடு உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, கோட்டைக்கரை கோயிலில் இருந்து தெற்கு குடியிருப்பு ரோட்டில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.51 கோடியில் புதிய ரோடு போடும் பணிக்கு நிதி ஒதுக்கினர். இந்நிதியில் 2.5 கி.மீ., துாரத்திற்கு ரோடு போடும் பணி துவங்கியது. இதற்கிடையில் இரண்டு இடங்களில் பாலம் கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தெற்கு குடியிருப்பு அருகே பாலம் கட்டும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டன. இதனால் புதிய ரோடு போடும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் ரோட்டில் செல்ல முடியாமல் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். வனத்துறை இடத்தால் சிக்கல்
புதிய ரோடு போடும் 2.5 கி.மீ., துாரத்தில் 800 மீ., மட்டும் வனத்துறைக்கு சொந்தமான பகுதியாக இருந்து வருகிறது. இதனால், ரோடு போடுதல், அங்கு பாலம் கட்டுதல் போன்ற பணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் வளர்ச்சித்துறை, வனத்துறையும் இணைந்து, இங்கு தடையின்றி பாலம் கட்டி, ரோடு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது: வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் பாலம் கட்டி, ரோடு போடுவதற்கு அனுமதி வழங்குமாறு, கடிதம் எழுதியுள்ளோம். அனுமதி வந்ததும் பணிகள் விரைந்து தொடங்கி முடித்துதரப்படும், என்றனர்.