பால் உற்பத்தியாளருக்கான ஊக்கத்தொகை இழுபறி: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார்
சிவகங்கை: தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.3 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டுஉள்ளதாக சிவகங்கையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில்விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி முன்னிலை வகித்தார். வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமி பிரபா வரவேற்றார். கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர்உமாமகேஸ்வரி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் நடந்த விவாதம்: கோபால், சொக்கநாதிருப்பு: தவளைக்குளம் கண்மாய்க்கு, வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வர பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்திரன், இந்திய கம்யூ., சிவகங்கை: காஞ்சிரங்கால் முதல் மறவமங்கலம்வரை பெரியாறு கால்வாய் திட்டத்திற்கு 1994ம் ஆண்டு நிலம் வழங்கியவர்களுக்கு, இது வரை நிலத்திற்கான இழப்பீடு தொகை வழங்கவில்லை. ஆவணம் தொலைந்துவிட்டதாக வருவாய்துறையில் தெரிவிக்கின்றனர். கலெக்டர் : பெரியாறு கால்வாய்க்கு இடம் வழங்கிய விவசாயிகள் பெயர், பட்டா விபரங்களுடன் வந்தால், நடவடிக்கை எடுக்கப்படும். கன்னியப்பன், இளையான்குடி: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்துள்ளேன். இது வரை 2 மனுக்களுக்கு தான் பதில் வந்துள்ளது. கலெக்டர்: அந்தந்த துறைகள் மூலம் பதில் அளிக்கப்படும். வீரபாண்டி, மார்க்சிஸ்ட் சிவகங்கை: தொடக்க கூட்டுறவு வங்கிகளில் உர வினியோகமின்றி, தனியார் கடைகளில் கூடுதல் விலைக்கு விற்கின்றனர். ஏ.ஆர்.மோகன், திருப்புத்துார்: பால் உற்பத்தியாளருக்கான ஊக்கத்தொகை லிட்டருக்கு ரூ.3 வரை வழங்கப்படும் என தெரிவித்து, 4 மாதமாக வழங்கப்படாமல் உள்ளது. கலெக்டர்: தமிழக அளவில் இந்த நிலை உள்ளது. அரசு உத்தரவிட்டதும், ஆவின் நிர்வாகம் வழங்கும். பாண்டியன், விவசாயி, சாக்கோட்டை: மித்ராவயல்குரூப், பெத்தானேந்தல் கிராமத்தில் பொதுபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி 11 முறை மனு செய்தும் வருவாய்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விஸ்வநாதன், இந்திய கம்யூ., சிவகங்கை: தேசிய நெடுஞ்சாலை பணிகளின் போது ரோட்டோரம்எடுக்கப்படும் மண் பள்ளத்தால், மழை நீர் கண்மாய்களுக்கு செல்லாமல் தேங்கிவிடுகிறது. பள்ளத்தை மண் நிரப்பி மழை நீர் கண்மாய்க்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கருப்பையா, பா.ஜ., செங்குளிபட்டி: முத்துார் குரூப்பில் உள்ள 6 கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தேன். வருவாய்துறையினர் இதை கண்டு கொள்வதே இல்லை. பாரத் ராஜா, விவசாயி, திருப்புவனம்: சிவகங்கை அருகே வேம்பங்குடியில் 12 ஏக்கரில் 20 மாதத்திற்குள் கிராவல் மண் எடுக்க அனுமதிபெற்று, அனுமதியை விட கூடுதலாக எடுத்துள்ளனர். இதற்காக அரசு ரூ.15 லட்சம் அபராதம் விதித்தும், தொடர்ந்து நிர்ணயித்த அளவை விட கிராவல் மண் திருட்டு அதிகரிக்கின்றன. கலெக்டர்: நிர்ணயித்த அனுமதியை விட கூடுதலாக கிராவல் மண் எடுப்பதை ஆய்வு செய்து, விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கவேண்டும். விதிமீறல் கண்டறிந்தால் , கிராவல் குவாரியை மூடுவதற்கான நடவடிக்கையை கனிமவளத்துறை உதவி இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேங்கைமாறன், பேரூராட்சி தலைவர், திருப்புவனம்: தொடர் மழைக்கு கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. கிருதுமால் நதியிலிருந்து வீணாக கடலில் கலக்கும் மழை நீரை ஓடாத்துார் உள்ளிட்ட கண்மாய்களுக்கு திருப்பி விட வேண்டும்.எல்.ஆதிமூலம், திருப்புவனம்: கீழடியில் தொல்லியல் ஆய்வு செய்வதற்கு நிலம் வழங்கியவர்களுக்கு சென்ட் -க்கு ரூ.1.65 லட்சம்வரை வழங்கியுள்ளது. இன்னும் நிலம் வழங்கிய 3 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. வைகை ஆற்றில் சாயப்பட்டறை மற்றும் மருத்துவகழிவுகள் கலப்பதை தடை செய்ய வேண்டும்.ராமலிங்கம், விவசாயி, தமறாக்கி: கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.255 வீதம் ஊக்கத்தொகை வழங்க அரசு ரூ.247 கோடி ஒதுக்கியுள்ளது.சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு முழுமையாக ஊக்கத்தொகை வழங்கிட, படமாத்துார் சர்க்கரை ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கலெக்டர் வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.