| ADDED : நவ 22, 2025 02:44 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட கூட்டுறவு துறையில் காலியாக உள்ள 67 உதவியாளர் காலிபணியிடங்களுக்கு நவ., 26 ல் நேர்முக தேர்வு நடைபெறும் என இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் தெரிவித்தார். அவர் கூறியதாவது: சிவகங்கை மாவட்ட அளவில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் அனைத்து தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் உட்பட கூட்டுறவு அலுவலகங்களில் காலியாக உள்ள 67 உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நிலையம் மூலம் அக்., 11 ல் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களின் விபரங்கள் www.drbsvg.net என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண், இட ஒதுக்கீடு மற்றும் சிறப்பு தகுதிகள் அடிப்படையில் நேர்முக தேர்விற்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். நவ., 26 ம் தேதி நடைபெறும் நேர்முக தேர்விற்கான நுழைவு சீட்டை www.drbsvg.net என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அதில் குறிப்பிட்டுள்ள நேரம், அலுவலகத்திற்கு நேரடியாக பங்கேற்க வேண்டும் என்றார்.