உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேவகோட்டையில் மூன்றரை மணி நேரம் கொட்டிய மழை: ரோடுகளில் பெருக்கெடுத்து ஓடியது: வீடுகள் இடிந்தன

தேவகோட்டையில் மூன்றரை மணி நேரம் கொட்டிய மழை: ரோடுகளில் பெருக்கெடுத்து ஓடியது: வீடுகள் இடிந்தன

தேவகோட்டை: கனமழை காரணமாக தேவகோட்டை ரோடுகளில் சாக்கடையுடன் வெள்ளம் ஓடியது. தேவகோட்டையில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாமல் வெயில் சுட்டெரித்தது. நகரில் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களில் இதே நிலை தான் நீடித்தது. விவசாயத்தை நினைத்து கவலையுடன் இருந்த நிலையில் நம்பிக்கை கொடுக்கும் வகையில் தேவகோட்டையிலும் சுற்றுப்புற கிராமங்களிலும் இரண்டு தினங்களாக மிதமான மழை பெய்தது. நேற்று காலை 8:30 மணிக்கு துவங்கிய கனமழை மூன்றரை மணி நேரம் எந்த வித காற்றும் இல்லாமல் கொட்டியது. தேவகோட்டை நகர் முழுவதும் துார்வாராத நிலையில் அனைத்து கால்வாய்களும் நிரம்பி ரோடுகளில் ஓடியது. தியாகிகள் ரோட்டில் கால்வாய்க்கு செல்லும் ஓடைகள் அடைபட்டதால் கால்வாய்க்குள் செல்ல வழியில்லாமல் ரோட்டில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி கடைகளுக்குள் புகுந்தது. சிலம்பணி தெற்கு தெருவிலும் இதே நிலை. முத்தாத்தாள் பள்ளி அருகே உள்ள கால்வாய் அடைபட்டதால் மெயின் ரோட்டில் உள்ள தலைமை அஞ்சலக வளாகத்திற்குள் வழக்கம் போல் தண்ணீர் புகுந்தது. மேலவயல் குளக்காலில் தூர்வாராததால் தண்ணீர் முழுவதும் ரோடு, குறுக்கு பாலத்திற்கு மேல் ஓடி அப்பு.லெ. தெருவில் இரண்டு வீடுகளுக்குள் தண்ணீர் சென்றது. நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம்,துாய்மைபணியாளர்களுடன் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தண்ணீர் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டார்.வீடுகள் இடிந்தன : தேவகோட்டை நகரில் வெளுத்து வாங்கிய மழை கிராமங்களிலும் பெய்தது. இந்த மழையில் கண்ணங்குடி ஒன்றியம் தத்தணி கிராமத்தில் வள்ளி என்பவரது ஓட்டு வீடு இடிந்தது, வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்று இருந்ததால் வீட்டினுள் இருந்த பொருட்கள் மட்டும் சேதமடைந்தன. அருகில் உள்ள முத்துவின் வீட்டின் ஓடுகளும் சரிந்தன. கோடகுடி கிராமத்திலும் ஒரு ஓட்டு வீடு இடிந்து விழுந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !