| ADDED : ஜூலை 18, 2024 06:16 AM
திருச்சியில் இருந்து புதுக்கோட்டை, திருமயம், கானாடுகாத்தான் வழியாக காரைக்குடி வரை தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.,210) 90 கி.மீ., துாரம் இரு வழிச்சாலையாக 2011 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. தற்போது காரைக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கேற்ப சாலை போக்குவரத்தையும் தரம் உயர்த்த வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வரை நடத்திய ஆய்வில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் வாகனங்கள் இந்த ரோட்டில் சென்றுள்ளன. இது தவிர திருச்சியில் இருந்து மணல் எடுத்து வரும் டிப்பர் லாரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டன. இதனால், நாளுக்கு நாள் இரு வழிச்சாலையின் தரம் பாதிக்கப்படுகின்றன. இது போன்ற பிரச்னையை தவிர்க்க திருச்சியில் இருந்து புதுக்கோட்டை, திருமயம், கானாடுகாத்தான் வழியாக காரைக்குடி வரையிலான இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.நிலம் கையகம் செய்வதற்கான பணிகள் 60 சதவீதம் வரை முடிந்துள்ளது. மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் விரைவில் திருச்சி - புதுக்கோட்டை - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.,210) யை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்துவதற்கான பணி துவங்கும். அரசிடம் திட்ட அறிக்கை
தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: நாளுக்கு நாள் இந்த ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகரித்து விட்டது. மேலும், கனரக வாகனங்கள் இரு வழிச்சாலையில் செல்ல அதிக நேரம் செலவழிப்பதாக தெரிவிக்கின்றனர். இதனை கணக்கிட்டு, வருங்காலங்களில் வாகன பெருக்கத்தால், ரோட்டில் வாகன நெரிசல் ஏற்படாமல் சென்றுவர ஏதுவாக, திருச்சி - காரைக்குடி இடையே நான்கு வழிச்சாலை அமைக்க திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பியுள்ளோம். விரைவில் இதற்கு அரசு ஒப்புதல் அளிக்கும் என நம்புகிறோம் என்றனர்.