உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடி புறநகர் பகுதியில் குடியிருப்புகள்; கண்காணிக்க முடியாமல் தவிக்கும் போலீசார்

காரைக்குடி புறநகர் பகுதியில் குடியிருப்புகள்; கண்காணிக்க முடியாமல் தவிக்கும் போலீசார்

காரைக்குடி: காரைக்குடி புறநகர் பகுதியில் அரசு அலுவலகங்கள், கல்லுாரிகள், விடுதிகள், டைடல் பார்க் மற்றும் குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. இந்த பகுதி குன்றக்குடி போலீஸ் ஸ்டேஷனுடன் இணைக்கப்பட்டுள்ளதால் போலீசாரால் கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.காரைக்குடி உட்கோட்டத்தில் காரைக்குடி வடக்கு, தெற்கு, அனைத்து மகளிர், அழகப்பாபுரம், குன்றக்குடி, பள்ளத்துார்,செட்டிநாடு, சாக்கோட்டை, சோமநாதபுரம் மற்றும் குற்றப்பிரிவு என 10 போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்படுகின்றன. காரைக்குடி புறநகர் பகுதியான சூரக்குடி சாலை, ஹவுசிங் போர்டு போக்குவரத்து நகர், என்.ஜி.ஓ., காலனி உள்ளிட்ட பகுதிகள் குன்றக்குடி போலீஸ் எல்லைக்கு உட்பட்டவையாகும். அதிக குடியிருப்புகள் இல்லாத வரை குற்றச் சம்பவங்கள் குறைவாகவே இருந்தது. குன்றக்குடி போலீசாருக்கும் குறைந்த பணியே இருந்தது. தற்போது திருச்சி ராமேஸ்வரம் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.இதனால் என்.ஜி.ஓ., காலனி, போக்குவரத்து நகர், ஹவுசிங் போர்டு உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு மற்றும் பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து பத்திரப்பதிவு அலுவலகம், தீயணைப்பு நிலையம், வட்டார போக்குவரத்து அலுவலகம் இந்த பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. தவிர தற்போது புதிய அரசு சட்டக் கல்லூரி, மாணவ, மாணவியர் விடுதி, மினி டைட்டல் பார்க், மினி ஸ்டேடியம் உள்ளிட்டவையும் அமைய உள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள் அதிகரிக்க அதிகரிக்க, குடியிருப்புகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளதால் இப்பகுதியில் அடிக்கடி திருட்டுச் சம்பவங்களும் குற்றச் சம்பவங்களும் நடைபெறுகிறது. குற்றங்களில் ஈடுபடுபவர்கள் நெடுஞ்சாலை பகுதியில் எளிதாக தப்பிச் செல்கின்றனர். தகவல் அறிந்து 15 கி.மீ., தூரத்தில் இருந்து குன்றக்குடி போலீசார் வருவதற்குள் குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றனர். இதனால் குற்ற சம்பவங்களை உடனடியாக தடுப்பதற்கோ, குற்றவாளிகளை பிடிப்பதற்கோ அல்லது விபத்தில் காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்கு அனுப்பி வைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் குன்றக்குடி போலீஸ் ஸ்டேஷனில் போதிய போலீசாரும் இல்லை. இதனை தடுக்க, புறநகரில் தனி போலீஸ் ஸ்டேஷன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.எனவே, வளர்ந்து வரும் புறநகர் பகுதியை காரைக்குடி போலீஸ் ஸ்டேஷனுடன் இணைத்திடவோ அல்லது புதிய போலீஸ் ஸ்டேஷன் அமைப்பதற்கோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ