பெரியாறு தண்ணீர் திறக்கப்படுமா: தண்ணீரை எதிர்பார்த்து கண்ணீருடன்
சிங்கம்புணரி, திருப்புத்துார் பகுதி மக்களின் குடிநீர், விவசாய தேவைக்காக பெரியாறு ஏழாவது பிரிவு நீட்டிப்பு கால்வாயில் ஆண்டுதோறும் இருப்பை பொறுத்து அக்டோபரில் தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இப்பகுதியில் போதிய அளவு பெய்யாத நிலையில், அனைத்து கண்மாய்களும் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதனால் பெரியாறு நீட்டிப்பு கால்வாயில் முன்கூட்டியே தண்ணீர் திறக்க இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் எந்த பதிலும் இல்லாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து பாசன விவசாயிகள் சார்பில் போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதிகாரிகள் கேட்டுக் கொண்டதால் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் அக்.,28ம் தேதி சிங்கம் புணரி பகுதி கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்படும் என ஏழாவது பிரிவு பாசன வாய்க்கால் தலைவர் ராம.அருணகிரியிடம் பெரியாறு பாசன கோட்ட அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்நேரம் உழவுப்பணிகளை தொடங்கி, விதை பாவி, நாற்றுகளை வளர்த்திருக்க வேண்டும். ஆனால் பல இடங்களில் தண்ணீர் இல்லாததாலும், கால்வாய் தண்ணீர் வருவது கேள்விக் குறியாக உள்ளதாலும் விவசாயிகள் உழவுப் பணிகளை துவக்கவில்லை. இனியும் காலம் தாழ்த்தினால் இந்த ஆண்டு விவசாயமே செய்ய முடியாத நிலை ஏற்படும். மேலும் குடிநீருக்கும் பஞ்சம் ஏற்படும் நிலையும் உருவாகும் என விவ சாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே அதிகாரிகள் உறுதி அளித்தபடி அக். 22ல் உறுதியாக தண்ணீரை திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.