உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பள்ளிகளில் துாய்மை பணியாளர்கள் இல்லாத அவலம்: சுகாதாரமற்ற நிலையால் மாணவர்கள் பாதிப்பு

பள்ளிகளில் துாய்மை பணியாளர்கள் இல்லாத அவலம்: சுகாதாரமற்ற நிலையால் மாணவர்கள் பாதிப்பு

மானாமதுரை, நவ.12- - மானாமதுரை,இளையான்குடியில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றிய துாய்மை பணியாளர்களுக்கு கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை. தலைமை ஆசிரியர்கள் தங்களது சொந்த பொறுப்பில் சுகாதாரப் பணி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.மானாமதுரை,இளையான்குடி கிராம பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலை, நடுநிலை,துவக்க பள்ளிகளில் பணியாற்றும் துாய்மை பணியாளர்களுக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலமாகவும், நகர் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்கள் மூலமாகவும் சம்பளம் வழங்கப்பட்டன.கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால் துாய்மை பணியாளர்கள் வேலைக்கு வரவில்லை.அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் துாய்மை பணியாளர்களுக்கு தங்களது சொந்த பணத்திலிருந்து சம்பளம் வழங்கி பள்ளிகளில் துாய்மை பணி மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதால் அந்த பள்ளிகளில் சுகாதார பணிகள் நடக்கவில்லை. மாணவர்கள் கழிப்பறைகளை பயன்படுத்த முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. மேலும் ஒரு சில பள்ளிகளில் பணியாற்றிய துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்காத காரணத்தினால் வேலைக்கு வராததால் ஏராளமான பள்ளிகளில் கழிப்பறை சுத்தம் செய்யாமல் துர்நாற்றம் வீசி மாணவர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.பெற்றோர்கள் கூறியதாவது: அரசு பள்ளிகளில் ஏற்கனவே கழிப்பறை போதுமான அளவில் இல்லாமல் மோசமான நிலையில் காணப்படுகிறது.இந்நிலையில் துாய்மை பணியாளர்களும் வராத காரணத்தினால் அவற்றை மாணவர்கள் உபயோகப்படுத்த முடியாத சூழ்நிலை இருப்பதால் தமிழக அரசு துாய்மை பணியாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:பள்ளியில் உள்ள ஏராளமான பணிகளுக்கு நடுவே தற்போது கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்காக சுகாதார பணியாளர்களை தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் துாய்மை பணியாளர்களுக்கு 9 மாத காலத்திற்கும் மேலாக சம்பளம் வழங்கப்படாத காரணத்தினால் எங்களது சொந்த பணத்தை வைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கினாலும் அதற்குரிய பணத்தை அரசு அதிகாரிகள் வழங்க மறுத்து வருகிறது என்றனர்.மானாமதுரை,இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் இருப்பது குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளோம்.அங்கிருந்து உத்தரவு வந்தவுடன் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் சம்பளம் வழங்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி